பழநியில் குவியும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவு:கலெக்டர் நடவடிக்கை தேவை
பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்த போதும் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பழநி கோயிலுக்கு தைப்பூச விழாவுக்காக லட்சகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள், வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து காவடிகள், பால்குடம் எடுத்தும், அலகு குத்தி ஆட்டம் பாட்டத்துடன் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு: கிரிவீதி, அடிவாரம் ரோட்டோர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் உபயோகம் தாராளமாக உள்ளது. மலைக்கோயிலைச் சுற்றி நடைபாதையை ஆக்கிரமித்து நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவற்றை பொறுப்பான அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
பக்தர்கள் பாதிப்பு: இதனால் காவடி, உடலில் அலகு குத்தி வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். திருடர்களின் நடமாட்டமும் இப்பகுதியில் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இஷ்டம்போல தாறுமாறாக பஸ்களை நிறுத்துவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல், கூடுதல் விலைக்கு உணவுப் பொருள் விற்பனையாகிறது. பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வரும் பாதையை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதும் அவசியம்.
கலெக்டர் நடவடிக்கை: பழநி கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோயில், பாதவிநாயகர் உள்ளிட்ட பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துதரவேண்டும். விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிரிக்கும் என்பதால் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகளை மேம்படுத்த கலெக்டர் வினய் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.