300 ஆண்டுகால ஆலயம் புதுப்பித்தல் பணி துவக்கம்
ஆத்துார்:ஆத்துார் சவேரியார் கோயில் தெருவில், 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சவேரியார் ஆலயம் உள்ளது. கூட்டுப்பிரார்த்தனை, ஆராதனைகள் போன்றவை நடைபெற்று வந்தது. இங்கு ஆண்டுதோறும் சவேரியார் நினைவு நாளில்(டிச. 3ல்), திருவிழா நடப்பது பிரசித்தமானது. பழமை காரணமாக, இக்கட்டடத்தின் பல இடங்களில் சிதிலமடையத்துவங்கின. இதனால் பழைய கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பழைய கட்டடத்தை அகற்றுவதற்கான அனுமதி விழா நடந்தது. திண்டுக்கல் பிஷப் தாமஸ்பால்சாமி தலைமை வகித்தார். பாதிரியார் எர்னஸ்ட் அந்தோணிசாமி, ஆத்துார் பாதிரியார் பீட்டர்ராஜ், வண்ணம்பட்டி பாதிரியார் ஹெரால்டு ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு ஆடரம்பர கூட்டுத்திருப்பலியும், கூட்டுப்பிரார்த்தனையும் நடந்தது.பின்னர், இயந்திரம் மூலம் பழைய கட்டடத்தை அகற்றுவதற்கான பணிகள் துவங்கின. இந்தாண்டிற்கான சவேரியார் திருவிழா புதிய ஆலய கட்டடத்தில் நடத்த ஏதுவாக, பணி துவங்கிய 10 மாதங்களில் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.