திருவெம்பாவை பாராயணம்
அவிநாசி : பூண்டி அன்பு இல்ல மாணவர்கள், திருமுருகநாதசுவாமி கோவிலில், திருவெம்பாவை பாராயணம் செய்தனர். திருப்பூர் சுவாமி விவேகானந்த அறக்கட்டளையின் திருப்பூர் அன்பு இல்லம் பல்வேறு ஆன்மீக சமூக சேவைப்பணிகள் நடந்து வருகின்றன. நிர்வாக அறங்காவலர் பூர்ணசேவனாந்த மஹராஜ் தலைமையில், ‘மாதங்களில் சிறந்தது மார்கழி’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமுருகன்பூண்டியிலுள்ள, மாமாங்க பிள்ளையார் கோவில், திருமுருகநாத சாமி கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் மாதவிவனேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு நகர்வலமாக சென்று திருபள்ளியெழுச்சி, திரு வெம்பாவை, திருப்பாவை, ஆகிய 60 பாடல்களை, அன்பு இல்லம் மாணவர்கள் பாராயணம் செய்தனர். அறங்காவலர் கூறுகையில், ‘ஆண்டுதோறும், மார்கழி மாதம் அனைத்து நாட்களும், அதிகாலையில், ஊர்வலமாக சென்று, மாணவர்கள் பாராயணம் செய்வர். நடப்பாண்டிலும், பூண்டியிலுள்ள கோவில்களில், பாராயணம் செய்தோம். ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவ புராணம் உள்ளிட்ட பாசுரங்களை சிறப்பு பாராயணம் செய்கிறோம்,’ என்றார்.