உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

சேலம் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது. உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட, 16 வகை பொருட்களால் சிவகாமி அம்மனுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு, சிறப்பு சந்தனகாப்பு மற்றும் சர்வ அலங்காரத்தில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதில், சிவகாமி அம்மனும், நடராஜர் பெருமானும், பல்லக்கில் எழுந்தருளி, கோவிலை வலம்வந்தனர்.

* பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு, சிதம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, 4:30 மணிக்கு சிதம்பரேஸ்வரர் சிவகாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. 7:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. 9:30 மணிக்கு, சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில், நத்தமேடு, பெரமனூர் உள்ளிட்ட இடங்களுக்கு வீதி உலா சென்றார்.

* ஆத்தூர், வசிஷ்ட நதி தென்கரை கைலாசநாதர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், கைலாசநாதர், ஆதிபராசக்தி மற்றும் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணியளவில், தங்க நகை, புஷ்ப அலங்கார நடன கோலத்தில் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் சுவாமிகள், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா சென்றனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஓமலூர் காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், ஆருத்ரா சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !