ராசிபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ராசிபுரம்: மாவட்டம் முழுவதும், சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, தர்மசம்வர்த்தினி சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு யாக பூஜை, சுவாமிக்கு திருக்கால்யாணம் நடந்தது. அதில், பல்வேறு பகுதி களில் இருந்து வந்த பக்தர்கள், சீர் வரிசை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். பின், சுவாமி, உமா மாகேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று அதிகாலை, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, இரண்டு கால வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. நடராஜர், சிவகாம சுந்தரி மற்றும் சுந்தரருக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி கிராமத்தில், பழமை வாய்ந்த செண்பக ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்றாம்ஆண்டு ருத்ரஹோமம் மற்றும் ஆருத்ரா அபி ஷேக விழா நடந்தது. அதிகாலை, 4:15 மணி முதல், விநாயகர் மற்றும் நவக்கிரஹ வழிபாடு, ருத்ர யாகம், உற்சவர் புறப்பாடு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையம், ப. வேலூர் என, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.