உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாட்டு பொங்கல் நாளில் யானையை கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்

மாட்டு பொங்கல் நாளில் யானையை கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்

சேலம்: மாட்டு பொங்கல் நாளில், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானையை, நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில், மடங்களில் உள்ள, 29 யானைகள், வனத்துறை பராமரிப்பில் உள்ள, 18 யானைகளுக்கு, கோவில் நிர்வாகம், வனத்துறை சார்பில், பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடத்தியதோடு, பொங்கல், பழம், கரும்பு ஆகியவை சாப்பிட வழங்கப்பட்டன. ஆனால், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரியை, கோவில் நிர்வாகம், பொது நல அமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. அந்த யானை, காசநோயால் பாதிக்கப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான கோரிமேட்டில் உள்ள இடத்தில் பராமரிக்கப்படுகிறது. அங்கு சென்று, ஆறு மாதங்களான நிலையில், யானைக்கு தேவையான உணவுகள், குறிப்பிட்ட நேரத்தில் செல்லாத காரணத்தால், அதன் உடல் நிலை, பாதிப்புக்குள்ளாகி வருகிறது. வழக்கமாக, மாட்டு பொங்கல் நாளில், யானையை குளிப்பாட்டி, திருநீர், பொட்டு மட்டுமின்றி, சிறப்பு ஆடை அணிவித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கும். நேற்று, ராஜேஸ்வரியை பாகன் குளிப்பாட்டிய நிலையில், திருநீர், சந்தனம், சிறப்பு ஆடை அணிவிக்கப்படவில்லை.

சேலம் மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சந்தோஷ்குமார் கூறியதாவது: யானை ராஜேஸ்வரியை, சுடுகாடு அருகே வைத்து பராமரிக்கும் கோவில் நிர்வாகம், அதற்கு முறையான சிகிச்சை, உணவு வழங்கவில்லை என, புகார் வருகிறது. அதுமட்டுமின்றி, மாட்டு பொங்கல் நாளில், அதற்கான சிறப்பு பூஜையை கைவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ராஜேஸ்வரியின் உடல் நிலையில் அக்கறை இல்லாத, கோவில் நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !