கண்ணனால் கர்வம் அழிந்த இந்திரன்!
திசை மாறும் சூரியனை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசிநாள், பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைப் பற்றிப் புராணங்களில் பல தகவல்கள் கூறப்படுகின்றன. இந்திரனுக்கு போகி என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் இந்திரனுக்குப் பூஜை செய்யும் முயற்சிகளில் நந்தகோபன் முதலானோர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கண்ணனுக்கு ஏழு வயதிருக்கும் தந்தையே! எதற்காக இந்தப் பூஜை செய்கிறீர்கள். யாரைக் குறித்து இந்தப் பூஜையை நடத்தப்போகிறீர்கள்? என்று நந்தகோபரிடம் கேட்டான். கண்ணா! நமக்கு மழையைக் கொடுப்பவன் இந்திரன். மழையால் பசுக்களுக்குப் புல்லும் நமக்கு உணவுக்கு நெல்லும், கோதுமையும் மற்ற உணவுப் பொருட்களும் விளைகின்றன. அனைத்து ஜீவராசிகளும் மழையினால் தான் வாழ முடிகிறது. எனவே நம்மை வாழ வைக்கும் மழையைத் தரும் இந்திரனைக் குறித்தே இந்தப் பூஜையைச் செய்யப்போகிறோம் என்றார் நந்தகோபர்.
தந்தையே! யார் நூறு யாகங்களைச் செய்கிறார்களோ அவர்கள் இந்திரனாக ஆகலாம். நம்மை வாழவைப்பவை பசுக்கள். அவற்றுக்குப் புல், தழை முதலியவற்றைத் தந்து வாழவைப்பது இங்கிருக்கும். கோவர்தன மலைதான். இந்த கோவர்தன நாதனே இந்திரனுக்கும் இந்திரன். கிழக்கே ஜகன்னாதன், மேற்கே, துவாரகாநாதன், தெற்கே காமேஸ்வரன், வடக்கே பத்ரிநாதன் என்று நான்கு அதிபதிகள் நான்கு திசைகளுக்கும் இருக்கிறார்கள். இந்த நான்கு திசைகளுக்கும் நடுவில் கோவர்தன நாதர் அமர்ந்திருக்கிறார். எனவே நீங்கள் அவருக்கே பூஜை செய்யுங்கள் என்று கூறினார் கண்ணன். இந்திரனின் கர்வத்தை அடக்கவே கண்ணன் அவ்வாறு செய்தார். கண்ணனின் கூற்று சரியாகப்பட்டதால் இந்திரனுக்குப் பூஜை செய்வதற்குப் பதிலாக கோவர்தன மலைக்குப் பூஜை செய்வதாக முடிவு செய்யப்பட்டது. வேத விற்பன்னர்கள் அனைவரும் கோவர்தன மலையை அடைந்தார்கள். நீங்கள் மந்திரங்களை ஜபியுங்கள். நான் இந்த கோவர்தன நாதனுக்குப் பூஜை செய்கிறேன் என்றார் கண்ணன்.
பூஜை முடிந்து பகவான் கண்ணனே கோவர்தன மலை வடிவாகவும் இருந்து கோபாலர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார். அந்தச் சமயத்தில் நாரதர் இந்திர லோகம் சென்று, தேவேந்திரா, உனக்கு நடக்க வேண்டிய பூஜை நடக்கவில்லை. அதற்குப் பதிலாக கோபாலர்கள் கோவர்தன மலைக்குப் பூஜை செய்கிறார்கள். உனக்கு இது தெரியாதா? என்று கேட்டார். இந்திரன் கடுங்கோபம் கொண்டான். மாடுமேய்க்கும் ஒரு சிறுவன் என்னை அவமானப்படுத்திவிட்டானே. என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று கூறி மேகக் கூட்டங்களை அழைத்து, பேய் மழையாகப் பொழிந்து அந்த கோபாலர்கள் அனைவரையும் நாசப்படுத்துங்கள்! என்று உத்தரவிட்டுப் விரட்டினான். இந்திரன் ஆணையிட்ட படியே மேகங்கள் கூடி கடும் மழையைக் கொட்டின. கோகுல வாசிகளும், பசுக்கூட்டங்களும் கதறினர். அனைவருக்கும் ஆறுதல் சொன்ன கண்ணன் மென்மையான ஒரு நாய்க்குடையைப் (மழைக்காலங்களில் ஆங்காங்கே முளைத்திருக்கும்) பிடுங்குவது போல கோவர்தன கிரியை பெயர்தெடுத்து தன் சுண்டு விரலால் தாங்கினார். மலையின் கீழே பசுக்கூட்டங்கள் உட்பட கோகுலவாசிகள் அனைவரும் இருந்தனர். ஏழு நாட்கள் கொட்டிய மழையில் எந்த விதமான இன்னலும் இல்லாதபடி பகவான் கண்ணன் காப்பாற்றினார்.
இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என உணர்ந்த இந்திரன் மழையை நிறுத்தினான். இனி ஆபத்தில்லை என்று அனைவரும் வெளியேறினார்கள். கண்ணனும் கோவர்தன கிரியைக் கீழே வைத்தார். இந்திரன் அகம்பாவம் அகன்று, தேவாதிதேவா! உங்கள் பராக்கிரமத்தை அறியாமல் நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்தருளுங்கள் என்று மண்டியிட்டு வணங்கினான். காமதேனுவின் பாலைக் கொண்டு கண்ணனுக்கு அபிஷேகம் செய்தான். போகி என்னும் பெயர் பெற்ற இந்திரன் கர்வம் அடங்கி கண்ணனின் திருவடிகளில் விழுந்து வணங்கி கண்ணனின் பேரருளைப் பெற்ற நாளே போகிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுமறியாத கோகுலவாசிகள் கண்ணனைச் சரணடைந்ததைப் போல நாமும் கண்ணனைச் சரணடைந்தால் துயரங்கள் நம்மைத் தாக்காது காப்பார். நம் துயரங்கள் அனைத்தும் போய் தை முதல் புது வாழ்வு தொடங்குகிறோம். துன்பங்களைப் போக்குவதால் இந்தப் பண்டிகை போக்கி என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது. பழையன கழிந்து புதியன புகுவதற்கு முகமன் கூறும் விழா. தேவையற்ற பழையப் பொருட்களை வீட்டின் முன்பு குவித்து எரித்து விடுதல் வழக்கம். இதனால் கிருமிகள் அழியும். வீட்டின் உள்ளே சுவர்களுக்கு வெள்ளை அடித்துப் புதிய சூரிய ஒளியால் இன்னும் பளிச் சென்று தெரியும்படியான புத்துணர்ச்சி தரும் விழா போகிப் பண்டிகை எனலாம். மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீமன் நாராயணனைத் துதித்து நோன்பு நோற்ற ஆண்டாள் இந்த நாளில்தான் திருவரங்கநாதரைத் திருமணம் புரிந்து போக போக்கியங்களை அனுபவித்தாள். அதனால் இந்த நாள் போகிப்பண்டிகை என அழைக்கப்படுகிறது.