உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வந்தவாசி அருகே முயல் விடும் வினோத திருவிழா

வந்தவாசி அருகே முயல் விடும் வினோத திருவிழா

வேலுார் வந்தவாசி அருகே காணும் பொங்கலையொட்டி, முயல் விடும் வினோத திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லுார் கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் நாளில், குள்ளநரி விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். எந்த திசையில், குள்ளநரி ஓடி மறைகிறதோ, அந்த பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. தற்போது, குள்ளநரி கிடைப்பது அரிதாகி வருவதால், கடந்த நான்கு ஆண்டுகளாக குள்ளநரிக்கு பதிலாக, முயல் விடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு காணும் பொங்கலையொட்டி, அங்குள்ள ஏரி பகுதியில் முயல் விடும் விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது.முயல் கழுத்தில் மாலை அணிவித்து, நான்கு திசைகளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அப்பகுதி மக்களின் நம்பிக்கைப்படி, ஐந்து வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளின் தலையில், முயலை வைத்து தோஷம் கழிக்கப்பட்டது. இதில், தங்கள் குழந்தைகள் தலை மீது முயலை வைப்பதற்கு, கிராம மக்கள் முண்டியடித்ததைக் காண முடிந்தது.பின், ஏரி அருகே, மந்தைவெளி மைதானத்தில் முயல் விடும் திருவிழா நடந்தது. முயலை அங்கிருந்து சிறிது தொலைவு எடுத்துச் சென்று கீழே விடுவித்தனர். கிழக்கு திசை நோக்கி ஓடிய முயல், கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து மறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !