தைப்பூச பக்தர்களுக்கு நிழற்பந்தல்
பழநி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநியில் அதிகளவில் பக்தர்கள் குவியும் இடங்களில் தற்காலிக நிழற்பந்தல்கள் அமைக்கப்படுகிறது. பழநி தைப்பூச திருவிழா வரும் பிப்.,3ல் துவங்கி பிப்.,12 வரை நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, சென்னை, கோவை, திருப்பூர், தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க வசதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பழநி இடும்பன்குளம் கோயில் வளாகம், பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லுாரிவளாகம், கோயில் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பந்தல் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. இவ்விடங்களில் குடிநீர், தற்காலிக கழிப்பறைகள், ஷவர் குளிக்கும்வசதியும் செய்துதரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.