செவிலிமேடு ராமானுஜர் கோயிலில் அனுஷ்டான குளம் உற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவில், அனுஷ்டான குளம் உற்சவம் இன்றுநடைபெறுகிறது. இதை முன்னிட்டு வரதராஜப்பெருமாள், பகல், 12:00 மணிக்கு அங்கு எழுந்தருள்கிறார். காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் ஸ்ரீராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் தை மாதம் இந்த கோவிலில் அனுஷ்டான குளம் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு கோவிலில் இருந்து வரதராஜப்பெருமாள் தேவியர்களுடன் புறப்பட்டு, பகல், 12:00 மணிக்கு உடையவர் கோவிலில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து, பெருமாள் வேடுவன் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலையில் அங்கிருந்து துாப்புல் தேசிகன் கோவிலுக்கு செல்லும் பெருமாளுக்கு மரியாதை அளிக்கப்படும். அங்கிருந்து மீண்டும் கோவிலுக்கு செல்வார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர்.