ரசாயன கலவை மூலம் பாரம்பரிய கலைச்சின்னம் தூய்மை
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பாரம்பரிய கலைச்சின்னங்கள், ரசாயன பூச்சு மூலம் துாய்மைப்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சிற்பங்கள் அமைந்து, சர்வதேச பாரம்பரிய பழமை கலைநகராக விளங்குகிறது.
கி.பி., 7ம் நுாற்றாண்டில், பல்லவ மன்னர்கள், கடற்கரை, கற்பாறைகள் என, அமைந்த இந்நகரில், கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சனன் தபசு, குடைவரை மண்டபங்கள் ஆகிய சிற்பக்கலைச் சின்னங்களை படைத்தனர். ஐ.நா., கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய கலைச்சின்னங்களாக அங்கீகரித்துள்ள இவற்றை, இந்திய தொல்லியல் துறை பராமரித்து, பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், கடற்காற்றின் உப்புத்தன்மை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றால், இச்சின்னங்கள் பொலிவை இழக்கின்றன. அத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாத்து, பொலிவுடன் பராமரிக்க, இத்துறையின் ரசாயன பிரிவினர், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரசாயன கலவை பூச்சு மூலம் அழுக்கை நீக்கி, துாய்மைப்படுத்துகின்றனர். தற்போது, ஐந்து ரதங்கள் வளாகத்தில், இப்பணி துவக்கப்பட்டு உள்ளது.கலைச்சின்னத்தைச் சுற்றி சாரம் அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக, ரசாயன திரவக் கலவை மூலம், இச்சின்னம் கழுவப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுத்திகரிப்பு நீரில், காகிதம் கரைத்து தயாரிக்கப்பட்ட கூழ்மம், கலைச்சின்னத்தில் பூசப்படுகிறது. கலைச்சின்னத்தில் படிந்த அழுக்குகள், துாசு, வவ்வால் எச்சம் உள்ளிட்டவற்றை, இக்கூழ்மம் உறிஞ்சும். சில நாட்களில், கூழ்மம் நன்கு உலர்ந்து, அப்புறப்படுத்தப்படும் போது, கலைச்சின்னம் பொலிவடையும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.