ஆண்டவர் மட்டுமே நம் துணைவர்!
இங்கிலாந்தில் வசித்த ஒரு பெண், கவர்னரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தார். அதில், தங்கள் ஊரில் ஒரு அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்கித் தர வேண்டும் என கோரியிருந்தார். கவர்னரோ சற்றும் அக்கறை இல்லாமல், பாறைகள் நிறைந்த ஒரு நிலத்தை ஒதுக்கி விட்டார். இது தேவனின் செயல் என நம்பிய அந்தப்பெண், பாறைகளை உடைத்து, கட்டடம் கட்டுவதற்கு ஏற்படும் செலவை எண்ணிப் பார்த்தார். யோசிக்கும்போதே மலைப்பாக இருந்தது. ஆனாலும் அவர் கர்த்தர் மீது கொண்டிருந்த விசுவாசத்தால் அதைப் பற்றி கவலைப்படவில்லை. கர்த்தரிடம் தொடர்ந்து ஜெபித்தார். சில நாட்கள் தான் கழிந்திருக்கும். ஒரு காண்ட்ராக்டர் வந்தார். “சகோதரி! நான் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவை. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்! நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன்,” என்றார். அவரும் சம்மதித்தார். பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் பெருந்தொகை அப்பெண்ணுக்கு தரப்பட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, செலவே இல்லாமல், சமதளமான நிலத்தில் கிடைத்த பெருந்தொகையைக் கொண்டு விடுதியும் கட்டினார் அப்பெண். கர்த்தரிடம் வைக்கும் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் நிச்சயம் பலனுண்டு. இதைத் தான் பைபிள் எபி:13:6 வசனம்,“கடவுளே எனக்குத்துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன் என்று நான் தைரியமாகச் சொல்லலாமே!,” என்று சொல்கிறது.