உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் தைப்பூச விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் முருகன் தைப்பூச விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

துாத்துக்குடி, திருச்செந்துார் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில் தைப்பூச திருவிழா நடந்தது. இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், முருகன் வேடமணிந்து பக்தர்கள், ஆடல் பாடலுடன் பாதயாத்திரையாக திருச்செந்துார் வருகை தந்தனர். முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிேஷகம் நடந்தது. பின் காலை 7 .30 மணிக்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடினர். பலர் கோயில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தனர். உச்சிக்கால தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து அலை வாய் உகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலை 6 மணிக்கு உபயதாரர்கள் சார்பில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பின் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, கோயில் வந்து சேர்ந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் திருச்செந்துாருக்கு இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !