காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் அருளை வேண்டினர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், இதற்கு முன், 1995ல் கும்பாபிஷேகம் நடந்தது. 35 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலில் திருப்பணிகள் நடந்ததை அடுத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவானது.இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. 6ம் தேதி, யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலையில், ஜெயேந்திரர், விஜயேந்திரர் தலைமையில், கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு, வேதியர்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர்.உடல் நலக்குறைவு காரணமாக நடக்க சிரமப்பட்ட ஜெயேந்திரரை, மடத்தின் ஊழியர்கள், இருக்கையில் வைத்து துாக்கிச் சென்றனர். மதியம், 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.