உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை:கோவில்களில் அமைக்க கோரிக்கை

பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை:கோவில்களில் அமைக்க கோரிக்கை

உடுமலை :திருப்பூர் மாவட்டத்தில், பக்தர்கள் அதிகம் வருகை புரியும் கோவில்களில், பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுடன் வெளியூர் செல்லும்போது, பொது இடங்களில் பாலுாட்ட முடியாமல், தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். இதற்காக, அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலும், பாலுாட்டும் தாய்மார்களுக்கென, அனைத்து வசதிகளுடன் அறை ஒதுக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உத்தரவிடப்பட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், பொங்கலுார் நீங்கலாக, 12 வட்டாரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரு பஸ் ஸ்டாண்ட் என, 14 பாலுாட்டும் அறைகள், அமைக்கப்பட்டுள்ளன.அறையில், பாலுாட்டும் தாய்மார்களுக்கு இருக்கை, குளிரூட்டும்

வசதி, இரண்டு பணியாளர்கள், கழிப்பறை வசதி, நாப்கின் வசதி, அவற்றை எரியூட்டும் இன்சினரேட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.அதேபோல், பாலுாட்டும் அறையினை எத்தனை பேர், பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பான, பதிவேடு பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில அறைகள், குறுகிய இடத்தில் அமைக்கப்பட்டு, ஆறு இருக்கைகள், இரண்டு மின் விசிறிகள் மட்டும் போடப்பட்டுள்ளன. இதர வசதிகள் செய்யப்படவில்லை. ஊழியர்கள் இல்லை; தனி பதிவேடும் பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு, பக்தர்கள் அதிகம் என்பதால், கோவில்களிலும், பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், கோவில்களில், பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை ஒதுக்கப்படவில்லை. அரசாணை கிடைக்கப்பெற்றால் மட்டுமே, கோவில்களில், பாலுாட்டும் அறை அமைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !