சபரிமலை நடை நாளை மாலை திறப்பு
சபரிமலை: மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து, கடந்த மாதம், 20-ம் தேதி காலை அடைக்கப்பட்ட சபரிமலை நடை, நாளை மாலை, 5:00 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறாது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 13-ல், அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். தொடர்ந்து, வழக்கமான கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை, உதயாஸ்தமனபூஜை, சகஸ்ரகலசம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 17- வரை, எல்லா நாட்களிலும், இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். தற்போதுள்ள கொடி மரம் பழுதடைந்துள்ளதால், புதிதாக தங்க கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேக்கு மரம் மூலிகை எண்ணெயில் பதப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, வரும், 17ல், தற்போதைய கொடி மரம் அப்புறப்படுத்தும் பணி துவங்குகிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின், பணிகள் துவங்கும். ஜூன், 25-ல், புதிய கொடி மரம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.