உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷங்கள் முழங்க சென்னிமலை முருகன் தேரோட்டம்

அரோகரா கோஷங்கள் முழங்க சென்னிமலை முருகன் தேரோட்டம்

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம், அரோகரா கோஷங்கள் முழங்க, நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற, சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழா, பிப்., 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, தேரோட்டம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது.

நேற்று அதிகாலை, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:18 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவ மூர்த்திகள், ௬:32 மணிக்கு தேர்களில் எழுந்தருளினர். முதல் தேரில், விநாயகர், பெரிய தேரில் அமர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்தில் முருகப்பெருமான், மூன்றாம் தேரில், நடராஜர் சமேதராக எழுந்தருளினார். காலை, 6:43 மணிக்கு, ஈரோடு கலெக்டர் பிரபாகர், ஆர்.டி.ஓ., நர்மதா தேவி வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கினர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். அப்போது, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷம், விண்ணை பிளந்தது. வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள், தேர்கள் மீது உப்பு, மிளகு மற்றும் கடலைக்காய், நெல் துாவி வழிபட்டனர். நேற்று மாலை, 5 மணிக்கு, வடக்குராஜ வீதியில், தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்று மாலை, நிலையை அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !