இருக்கன்குடியில் தை கடைசி வெள்ளி: பக்தர்கள் நேர்த்தி கடன்
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடந்த தை கடைசி வெள்ளி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இக்கோயிலில் தை மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை யன்று பெருந்திருவிழா நடைபெறுவதுண்டு. நேற்று தை கடைசி வெள்ளி விழா நடந்தது. விருதுநகர், துாத்துக்குடி,திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை, பஸ்கள், லாரிகள், வேன்கள் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேர்த்திக்கடன்: பக்தர்கள் பொங்கல், முடிகாணிக்கை, அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை, கயிறுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. தீயணைப்புவாகனத்துடன் 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு பூஜாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.