குருந்தமலையில் தைப்பூச தேரோட்டம்
மேட்டுப்பாளையம் :காரமடை அடுத்த குருந்தமலையில் குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் தேதி அம்மன் அழைப்பும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. நேற்று முன் தினம் காலை வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமி அலங்காரம் செய்த தேரில் எழுந்தருளினார். மாலை, 6:00 மணிக்கு மிராஸ்தார்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாதஸ்வர இசை, தாரைதப்பட்டை முழங்க, கிரிவலப்பாதையில் தேர் சுற்றி வந்து இரவு நிலையை அடைந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, காவடி எடுத்து வருதலும், இரவு தெப்பத்திருவிழாவும், மயில் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.