உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி கடலில் கிடைத்த 13ம் நூற்றாண்டு முருகன் சிலை

கன்னியாகுமரி கடலில் கிடைத்த 13ம் நூற்றாண்டு முருகன் சிலை

சென்னை: கன்னியாகுமரி கடல் பகுதியில், மீனவர் வலையில், 13ம் நுாற்றாண்டு, பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த, கல்லால் ஆன, முருகன் சிலை கிடைத்துள்ளது. கன்னியாகுமரியின், லீ கடல் பகுதியில், 11ம் தேதி காலை, கட்டுமரத்தில் நான்கு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வலையை இழுக்க முடியாத அளவுக்கு, கனமாக இருந்தது. அதனால், கடற்கரை பகுதிக்கு படகு வந்ததும், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். அன்று மதியம், அப்பகுதிக்கு வந்த கடலோர காவல் படையினர், மீனவர்களின் வலையை கரைக்கு கொண்டு வந்தபோது, அதில், 200 கிலோ எடையுள்ள, கற்சிலை இருந்ததை பார்த்தனர். உடனே, வருவாய் ஆய்வாளர் திவானுக்கு தகவல் கொடுத்தனர். அவர், சிலையை கைப்பற்றி, கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

சிலை குறித்து, கன்னியாகுமரி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி கூறியதாவது: முருக பெருமானின் கற்சிலை, ௪.௫ அடி உயரம் உள்ளது. அதன் வலது மேல் கையில் வஜ்ராயுதமும், இடது மேல் கையில் சக்தி ஆயுதமும் உள்ளன. முருக பெருமான் தலையில், நீண்ட கிர்தா மகுடம் உள்ளது. முருகனின் ஆடைகள், முழங்கால் வரை உள்ளன. இதே அமைப்புடைய வெண்கல முருகன் சிலை, சென்னை அருங்காட்சியகத்தின் படிமக் காட்சிக் கூடத்தில் உள்ளது. அது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால சோழர் கால சிலை. அதே உருவத்தை ஒத்துள்ளதால், இதுவும் பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். மேலும், கடலாய்வு செய்தால், பல தகவல்கள் வெளிவரலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !