யாத்ரீகர்களுக்கான வசதிகள் கோவில் அருகே பணி துவக்கம்
காஞ்சிபுரம்: பாரம்பரிய நகர மேம்பாடு வளர்ச்சி திட்டத்தின் கீழ், வரதராஜப்பெருமாள், ஏகாம்பர நாதர் கோவில்கள் அருகில் நடந்த யாத்ரீகர்கள் வசதிக்கான வேலைகள் நிறுத்தப்பட்ட நிலையில், ஆணையரிடம் அனுமதி பெற்று, மீண்டும் வேலை துவங்கி உள்ளது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப்பெருமாள், காமாட்சி அம்மன் ஆகிய கோவில்களில் பாரம்பரிய நகர மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ், கோவிலுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை, துாய்மையான குடிநீர், காலணிகள் பாதுகாப்பு அறை, வை - பை வசதி மற்றும் கோவிலை சுற்றி சாலை பழமையான நகரம் என்பதை குறிக்கும் வகையில் மின் விளக்கு போன்ற வசதிகள் செய்ய, மத்திய அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன், ஏகாம்பரநாதர் மற்றும் வரத ராஜப்பெருமாள் கோவில் மதில் சுவர் ஒட்டி, பணிகள் துவங்கின. மதில் சுவர் அருகே குழி தோண்ட, கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, வேலையை நிறுத்தியது. இந்நிலையில், மதில் சுவரிலிருந்து சில அடிகள் தள்ளி, பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு, அறநிலையத் துறை ஆணையர் அனுமதி பெறப்பட்டுள்ளது.