மதுரை கூடலழகர் தெப்பக்குளத்தில் அமைகிறது படகு குழாம் முதற்கட்ட பணி துவக்கம்
மதுரை, :மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை துாய்மைப்படுத்தி, மழைநீர் சேகரிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து, தெப்பத்தை சுற்றிலும் இருந்த கடைகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. தெப்பத்தை அழகுபடுத்தி படகு குழாம் அமைக்கப்படவுள்ளது. மதுரையின் இருதயப் பகுதி என அழைக்கப்படும் டவுன்ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோயிலின் தெப்பக்குளம் இருக்கிறது. பழமையும், புராதன சிறப்பும் மிக்க தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்கள் முன்பு இருந்தன. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கால்வாய்கள் துார்ந்து போயின. தெப்பத்தை சுற்றிலும் கடைகள் முளைத்தன. நாளடைவில் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து கோயில் நிர்வாகம் வாடகை தொகை வசூலித்தது.
மதுரை கிளை உத்தரவு: தெப்பத்தை பராமரித்து, துாய்மைப்படுத்தி, மழைநீர் சேகரிக்கக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய மதுரை கிளை தெப்பத்தை பராமரித்து, மழைநீர் சேகரிக்க கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி 2014ம் ஆண்டு தெப்பக்குளம் மேம்பாட்டு நிதியாக இந்து அறநிலையத்துறை சார்பில் 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் தெப்பத்தை சுற்றிலும் உள்ள 87 கடைகள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் நிதி ஒதுக்கியும் தெப்பம் பராமரிக்கப்படவில்லை.
14 கடைகள் அகற்றம்: கடைகளை முழுமையாக அகற்றினால் மட்டுமே துாய்மைப்பணி சாத்தியம் என மாநகராட்சி ஆய்வு உறுதி செய்தது. முதற்கட்டமாக, வாடகை பாக்கியை காரணம் காட்டி 14 கடைகளை அகற்றும் பணி துவங்கியது. அறநிலைத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, கோயில் செயல் அலுவலர் அனிதா, வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று 14 கடைகள் அகற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மீதமுள்ள 73 கடைகளும் படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் செயல் அலுவலர் கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவுப்படி தெப்பத்தை பரா மரிக்கும் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெப்பத்தை சுற்றிலும் உள்ள 87 கடைகளில் 14 கடைகளை காலி செய்து சீல் வைத்துள்ளோம். அடுத்தடுத்து அனைத்து கடைகளும் காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும், என்றார். ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெப்பத்தை சுற்றிலும் பூங்கா, நடை பயிற்சிக்கு தனி வழித்தடம், மைய மண்டபம் புதுப்பித்தல், மழைநீரை சேமித்து படகு குழாம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.