கோவில் நிதியை பயன்படுத்தி அறநிலைய துறையினர்... குதுகலம்!
தமிழகத்தில் வருமானம் அதிகமுள்ள கோவில்களின் நிதி, தர்ம காரியங்களுக்கு சம்பந்தமில்லாமல், கட்டடங்கள், பொருட்காட்சி என சகட்டுமேனிக்கு, அறநிலையத் துறை பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிதியை, அதற்கு நேரடி தொடர்பில்லாத தர்ம காரியங்களுக்கு செலவு செய்யலாம். ஆனால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய, கோவில் அறங்காவலர்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது. அறங்காவலர்கள் இதற்காக உரிய, நோட்டீஸ் கோவில் நிர்வாகத்திடம் வைக்க வேண்டும்; ஆணையர் அனுமதி பெற வேண்டும். மேலும், தர்ம காரியங்களுக்கு மட்டும் தான், பணம் எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, அறநிலையத் துறைச் சட்டம் விதித்துள்ளது. ஆனால், அறநிலையத் துறை இதை மீறி, தங்களுக்கு வேண்டிய செலவுகளுக்கு, கோவிலுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத செலவுகளுக்கு, வருமானம் உள்ள கோவில்களில் இருந்து, மிகப் பெரும் அளவில் நிதி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆன்மிக நல ஆர்வலர் ஒருவர் கோரிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் நிதியில், கமிஷனர் அலுவலக புதிய கூட்ட அரங்கம், 10.35 லட்சம் ரூபாய்; இலவச திருமணங்கள், 10 லட்சம் ரூபாய்; அரசு பொருட்காட்சி, எட்டு லட்சம் ரூபாய்; தனியார் நடத்திய பொருட்காட்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் என, செலவழிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து, ஆன்மிக நல ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: பக்தர்கள் மூலமாகவும், கோவில் சொத்துக்கள் மூலமாகவும் வரும் நிதி, கோவில் பராமரிப்பு, பூஜை உள்ளிட்ட விதிமுறைக்கு உட்பட்ட தர்ம காரியங்களுக்கு மட்டுமே செலவழிக்க முடியும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரி களோ, தங்கள் இஷ்டத்திற்கு கோவில் நிதியை பல ஆண்டுகளாக செலவழித்து வருகின்றனர். சமீபத்தில், அறநிலையத் துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு தேவையான உணவுகள் வாங்க, கோவில் நிதியை செலவு செய்துள்ள தகவல் வெளியானது.
இந்நிலையில், கோவிலுக்கு சம்பந்த மில்லாத பல்வேறு பணிகளுக்காக, கோவில் நிதியை செலவு செய்தது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. கோவில் கணக்கு வழக்குகளை கண்காணிக்க மட்டுமே, அறநிலையத் துறைக்கு உரிமை உள்ளது. ஆனால், கோவில் நிதியை, இஷ்டத்திற்கு செலவு செய்யும் அறநிலையத்துறையின் அதிகாரப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கு தொடருவோம்!
கோவில் நிதியை, அதற்கு சம்பந்தமில்லாமல், அறநிலையத் துறையின் பணிகளுக்கு செலவிடுவது, தொடர்கதையாகி வருகிறது. இவை, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக, அறநிலையத் துறை மீது, வழக்கு தொடர உள்ளோம். டி.ஆர்.ரமேஷ் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர்
-நமது நிருபர் -