மயான கொள்ளை திருவிழா: காஞ்சியில் கோலாகலம்
காஞ்சிபுரத்தில், மயானக்கொள்ளை திருவிழா நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். ஆண்டு தோறும், மாசி மாதம் அமாவாசை அன்று பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடப்பது வழக்கம். இதற்காக, பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த அலகு குத்தியும், பல்வேறு வேடமிட்டும் மயானம் வரை நடந்து செல்வர். இந்த விழாவில், நேற்று மதியத்தில் இருந்து பக்தர்கள், பல வேடங்களிட்டு கம்மாளத்தெரு, செங்கழுநீரோடை, கிழக்கு ராஜவீதி, இந்திரா சாலை போன்ற வழிகளில், ஊர்வலமாக சென்றனர். காளி வேடமிட்டு சென்றவர்கள் காலில் விழுந்து குழந்தைகள், முதியோர் ஆசிபெற்றனர். பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 6:00 மணிக்கு தாயார் அம்மன் ஊர்வலம், வெள்ளக்குளம் பழைய ரயில் நிலையம் இடுகாட்டில் நிறைவு பெற்றது. இந்த விழாவிற்காக நேற்று, செங்கழுநீரேடை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
வாலாஜாபாத்: மயானக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு, 24ம் தேதி காலை 7:15 மணிக்கு, கோவிலில், கொடியேற்றும் விழா துவங்கியது. கடந்த, 25ம் தேதி இரவு, 7:30 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந் தருளி, கரகத்துடன் வீதியுலா வந்தார். இறுதி நாளாக, நேற்று பகல், 3:00 மணியளவில், சிம்ம வாகனத்தின் மீது அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மயான கொள்ளை உற்சவத்திற்கு புறப்பட்டு சென்றார். வாகனங்களை கயிறுகளாலும், சங்கிலியை உடம்பில் சொருகி இழுப்பது, காளி வேடம் அணிவது, விளைச்சல் பொருட்களை சூறையிடுவது உள்ளிட்ட வேண்டுதல்கள், பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன. பின், சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அங்காள பரமேஸ்வரியின் முன், மயான கொள்ளை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். - நமது நிருபர் குழு -