எதற்காக அஞ்ச வேண்டும்
உமர்(ரலி) அவர்கள் தெருவில் வருகிறார் என்றாலே, ஊரே நடுங்கும். தலைவர்கள் கூட அவருக்கு அஞ்சுவார்கள். சிறுவர்கள் அவர் வருவதை அறிந்தால், விழுந்தடித்து ஓடி விடுவார்கள். அவர் மிகவும் நல்லவர். ஆனால், முன்கோபக்காரர். தவறுகளைக் கண்டிப்பவர். ஒருமுறை, அவர் தெ ருவில் வருவதை அறிந்த சிறுவர்கள், உமர் வருகிறார்! ஓடி விடலாம், என்று சிட்டாய் பறந்தார்கள். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் அவரைக் கண்டு அஞ்சவில்லை. தைரியமாக தெருவில் நின்றான். உமர் மிகுந்த தோரணையுடன் சிறுவனை நெருங்கினார்கள். ஏனப்பா! உன் நண்பர்கள் எல்லாம் என்னைக் கண்டு ஓடி விட்டார்கள். நீ மட்டும் தைரியமாய் நிற்கிறாயே! பயமில்லையா? என்று கேட்டார்கள். ஐயா! ஏன் இந்தத்தெரு அகலமாகத்தா னே இருக்கிறது. நான் வழிவிட்டால் தான், நீங்கள் போகும் அளவுக்கு குறுகியிருக்கிறதா என்ன! அது மட்டுமல்ல, உங்களைக் கண்டு பயந்து ஓடும் அளவுக்கு, நான் தவறேதும் செய்யவில்லையே! என்று திருப்பிக் கேட்டான் சிறுவன். சிறுவனின் தைரியமான பதில் உமர்(ரலி) அவர்களைக் கவர்ந் தது. அவனை பாராட்டினார்கள். அந்த சிறுவன் தான், பிற்காலத்தில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) என்ற மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர்கள். குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா!