உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தபுராணம் படித்தால் தேவலோக பதவி!

கந்தபுராணம் படித்தால் தேவலோக பதவி!

திருப்பூர் : ""எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கந்தபுராணத்தை காதலித்து படிப்பவர்களுக்கு தேவலோக பதவி கிடைக்கும், என கந்தபுராண தொடர் சொற்பொழிவில் ருக்மணி பேசினார்.கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் கந்தபுராண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது.சொற்பொழிவாளர் ருக்மணி பேசியதாவது:எந்த செயல் செய்தாலும் பலன் எதிர்பார்த்தே அனைவரும் செயல்படுகின்றனர். ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. கந்தபுராணத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால், கந்தபுராணம் படித்தால் தேவலோகம் கிடைக்கும். கந்தபுராணத்தை வாசிப்பதால், எதுவும் கிடைக்காது; "கந்தபுராண மகாகதையை காதலித்து ஓதுவோர்க்கே இந்திரலோக பதவி கிட்டும், என்பது வாக்கு. கந்தபுராணத்தில், சம்பவ காண்டம், உற்பத்தி காண்டம், அசுர காண்டம்; தேவ, தக்க காண்டங்கள் உள்ளன. தாட்சாயணியின் தந்தை தக்கன், சிவனை அழிப்பதற்காக யாகம் செய்தான்; தேவர்கள் அனைவரும் சென்றிருந்த நிலையில், அங்கு சென்ற தாட்சாயணி கோபத்தில் அவன் நடத்திய யாகத்தினுள் விழுந்தாள்; 101 சக்தி பீடங்கள் உருவாகின. உலக நன்மைக்காக தனதுக்கு விமோசனம் அளிக்க வேண்டும் என்று தாட்சாயணி வேண்டி கேட்க, சிவன் அருளால் இமயமலையில் தவம் செய்து கொண்டிருந்த பர்வதராஜனுக்கு மகளாக பிறந்தாள்.சிறு வயதிலேயே சிவபக்தி நிறைந்திருந்த தாயார் உமையாள், தனது ஐந்து வயதில் சிவனையே கணவனாக அடைய வேண்டும் என்று இமயமலையில் தவம் இருந்தாள். எந்த ஒரு பொருளையும் குழந்தைகளிடம் கொடுக்கும் முன், அந்த பொருளை பிள்ளை பாதுகாத்துக் கொள்ளுமா என்பதை சோதித்து தெரிந்து கொண்டுதான், நாம் கொடுப்போம். சிவபெருமான் கிழவனாக வேடம் பூண்டு, பார்வதி தவம் புரிந்த இடத்துக்கு வந்தார். "நீயோ ராஜாவின் மகள்; ஏன் ஏதும் இல்லாத, சுடுகாட்டில் வாழும் சிவனை கணவனாக அடைய நினைக்கிறாய், என்றார். கோபம் கொண்ட பார்வதி, "பெரியவரே, அவர் வாழும் இடத்துக்கு (கோவில்) வராதவர்கள்கூட, சுடுகாட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும்; அங்கு வைத்து அருள்புரியலாம் என்ற தியாகத்தினால்தான் சிவன் சுடுகாட்டில் வாழ்கிறார், என்றாள்.தன்னைப்பற்றி நன்கு புரிந்துகொண்ட பக்தர்களை, பகவான் விடுவது இல்லை; பார்வதிக்கு காட்சி கொடுத்தார், சிவபெருமான். தாயார் பார்வதிக்கே சோதனை என்றால், சாமான்யப்பட்ட நமக்கு ஆண்டவன் கொடுக்கும் சோதனைகள் எல்லாம் மிகவும் குறைவுதான்.இமயமலையில் சிவபார்வதி திருமணம் நடந்தது; தேவர், ரிஷிகள் அனைவரும் தென்திசையிலிருந்து இமயம் நோக்கி வடதிசை வந்ததால், தென் திசை உயர்ந்தது. அகத்திய முனிவரை தென்திசை நோக்கி போகச்சொன்னார் சிவன். அகத்தியரும் தென்திசை செல்ல, பூமி சமமானது; சிவபார்வதி திருமணம் இனிதே முடிந்தது.அப்போது, சிவனிடம் அழியா வரம் வாங்கிய சூரபத்மன் என்ற அசுரன், மாபாதகங்கள் செய்து வந்தான். முன்பொருமுறை, சிவனை அவமதித்து தக்கன் செய்த யாகத்துக்கு சென்றதால்தான் நமக்கு இந்த துன்பம்; அவனை புரிந்துகொண்டு, சரணடைந்தால், துன்பங்கள் நீங்கும் என்று புரிந்துகொண்டு பிரம்மதேவன் உட்பட தேவர்கள் அனைவரும் சிவனை நாடினர். தன்னை புரிந்துகொண்டு சரணடைபவர்களுக்கு எப்போதும் அருளும் சிவன், தன்னால் மட்டுமே (சிவனால்) அழியும் வரம்பெற்ற சூரபத்மனை அழிப்பது சரியில்லை என்று எண்ணினார். தேவர்களை காப்பதற்காக, முருகப்பெருமானை படைத்தார், என்றார்.விஸ்வேஸ்வரர் கோவில் கலையரங்கில் வரும் நவ., 1 வரை கந்தபுராண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி காலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !