உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் நாக சதுர்த்தி விழா!

அம்மன் கோவில்களில் நாக சதுர்த்தி விழா!

திருவள்ளூர் : நாக சதுர்த்தி விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் உள்ள பாம்பு புற்றிற்கு பால், முட்டை ஊற்றி, பெண்கள், குடும்பத்துடன் வழிபட்டனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாசூர் மகா செல்லியம்மன் புற்றுக் கோவிலில் நாக சதுர்த்தி விழாவான நேற்று, அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் கடம்பத்தூர் அடுத்த அகரம் நாகவல்லி அம்மன் புற்றுக் கோவிலிலும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை சர்ப்ப விநாயகர், நாகவள்ளி கோவிலில் நாகசதுர்த்தி முன்னிட்டு, காலை 6 மணிக்கு பால், தயிர், மஞ்சள் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் வந்திருந்து அங்குள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் நாகலாபுரம் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள நாகவள்ளி கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலிலும் நாகசதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருத்தணி: திருத்தணி கங்கையம்மன் கோவில், நல்லாங்குளம் நாகவள்ளி, மடம் மற்றும் மேட்டுத் தெருவில் உள்ள படவேட்டம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் நாக சதுர்த்தி முன்னிட்டு திரளான பெண்கள் அங்குள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ராமகிருஷ்ணாபுரம் தேசம்மாள் கோவில், மாம்பாக்கம்சத்திரம் முக்கோட்டி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதேபோல், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு பகுதிகளிலும் நாக சதுர்த்தி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !