ராஜகுளம் தெப்போற்சவம் நாளை கோலாகல ஏற்பாடு
வாலாஜாபாத்: ராஜகுளம் கிராமத்தில், வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம், நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, காஞ்சி வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 24ம் ஆண்டு தொப்போற்சவத்தை முன்னிட்டு, நாளை காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், காஞ்சி வரதராஜப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, நத்தப்பேட்டை வழியாக வையாவூர், கவுரியம்மன்பேட்டை, ராஜகுளம் வந்தடைவார். அதையடுத்து, மூவரும் மீண்டும் கண்ணாடி பல்லக்கில், சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, பழைய இலுப்பப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று, மாலையில், ராஜகுளம் மண்டபத்தை வந்தடைவர்.மூவருக்கும், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து, இரவு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், காஞ்சி வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, இலுப்பப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், கே.ரோஸ்கண்ணன் மற்றும் சிட்டியம்பாக்கம் கிராமவாசிகள் செய்துள்ளனர்.