உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை.. சகல சௌபாக்கியமும் கொடுக்கும் சாவித்திரி விரதம்

நாளை.. சகல சௌபாக்கியமும் கொடுக்கும் சாவித்திரி விரதம்

நமது தேசத்தில் எப்போதுமே பெண்களுக்கு மிக்க மரியாதையும் அங்கீகாரமும் உண்டு. கணவனோடு இணைந்து மனைவி நடத்தும் இல்லறத்தையே சிறந்த தர்மமாக இந்து மதம் சொல்கிறது. எந்த ஹோமம், எந்த யாகம் என்றாலும் மனைவி அருகில் இல்லாமல் நடத்த முடியாது என்கிறது நமது வேதம். அதனால்தான் ராமர்கூட சீதையை காட்டுக்கு அனுப்பிய பின் அசுவமேத யாகம் செய்யும் போது அவளைப் போன்ற ஒரு தங்கப் பதுமையை அருகில் வைத்துக் கொண்டார் என்று உத்தர ராமாயணம் சொல்கிறது. இப்படி இல்லறத்தில் பெண்களின் பங்கு மிக அதிகம். அப்படிப்பட்ட புனிதமான இல்லறம் நிலைக்க கணவனது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மிகவும் முக்கியம். பெண்கள் நெற்றியில் குங்குமம் துலங்க கழுத்தில் மாங்கல்யம் மின்ன சுமங்கலிகளாக இருப்பதையே பெரிதும் விரும்புவர். அவர்களது இந்த தெய்வீக நோக்கம் நிறைவேற அன்னை பராசக்தி வகுத்துக்கொடுத்த விரதம்தான் காரடையான் நோன்பு.

இந்த நோன்பு சாவித்திரி விரதம் ஆனது எப்படி? சாவித்திரி என்ற கற்பரசியால்தான் இந்த விரத முறை பூவுலகுக்குக் கிடைத்தது. தேவ கன்னியர் இந்த பூஜை செய்து தங்கள் மனதுக்குப் பிடித்த கணவனை அடைந்தனர். தேவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் என்றாலும் உடல் நலம் குன்ற வாய்ப்பு உள்ளது. எனவே தேவலோகப் பெண்மணிகள் அன்னை பராசக்தியை நினைத்து இந்த பூஜையை செய்து பலனடைந்தார்கள் என்று சொல்கின்றன புராணங்கள்.

இந்த விரதம் எப்போது துவங்கியது? எப்படி பூமிக்கு வந்தது:

காமாட்சி அம்மன்: பலப்பல கற்ப காலங்களுக்கு முன்னால் அன்னை உமையவள் ஈசனைப் பிரிய நேர்ந்தது. எந்நேரமும் ஐயனையே சிந்தையில் போற்றும் அம்மைக்கு கணவனைப் பிரிவது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் விரைவிலேயே சிவபெருமானை அடைய வேண்டும் என்று நினைத்து விரதத்தைத் துவக்கினாள். மூன்று நாட்கள் நீடித்தது அந்த விரதம். நான்காம் நாள் சிவன் தோன்றி, தன் மனம் கவர்ந்த அன்னையை அழகிகளில் அழகி என்று பொருள்படும்படி காமாட்சி என்று அழைத்து ஏற்றுக்கொண்டார். அதனைக் கண்ட தேவலோகப் பெண்கள், தங்கள் கணவர்களின் கண்களுக்கும் தாங்கள் எப்போதும் அழகிகளாக, அவர்களது மனம் கவர்ந்தவர்களாக இருக்க வேண்டும், எந்த விதமான உடல் நலக் குறைபாடும் அவர்களுக்கு வரக்கூடாது என்று வேண்டினர். மனம் இரங்கிய அன்னை விரத முறையை தேவ மங்கையர்க்கு உபதேசித்தாள். இதனை முறைப்படி செய்து வந்தால் கணவன் மனதில் நீங்கா இடம் பிடிப்பதோடு, சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்று அருளினாள். அப்போது முதல் தேவர் உலகில் இந்த விரதம் மிகவும் பிரபலமாக விளங்கியது.

அசுவபதி மன்னன் மகள் சாவித்திரி: பல காலங்கள் முன்பாக மத்திராபுரி என்ற நாட்டை அசுவபதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குக் குழந்தைச் செல்வமே இல்லை. பல ஹோமங்கள், யாகங்கள் செய்தான். பலன் இல்லை. இறுதியில் சாவித்திரி தேவதையை நினைத்து பூஜித்தான். அவள் அருளால் ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு சாவித்திரி என்றே பெயர் சூட்டினான். குழந்தை சாவித்திரி பல கலைகளும் கற்று சிறந்த அறிவாளியாகவும், வீரம் மிக்கவளாகவும் இருந்தாள். அவளது அழகு, தைரியம், மனஉறுதி ஆகியவற்றைக் கண்டு பல மன்னர்கள் போட்டி போட்டு அவளை மணக்க முன்வந்தனர். ஆனால் மிகச் சிறந்த குணவான் ஒருவனையே மணக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் அவள். அதனால் அவளது தந்தை நீயே உனக்குப் பிடித்த மணாளனைக் கண்டறிந்து வா என்று அனுப்பினார்.

சாவித்திரியும் பல இடங்களுக்கும் பல தேசங்களுக்கும் சென்றாள். ஆனால் அவளுக்கு உகந்த மணாளனைக் கண்டறிய முடியவில்லை. இறுதியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்தாள். அங்கே அழகும் அறிவும் மிகுந்து விளங்கும் இளைஞன் ஒருவனைக் கண்டாள். தன்னைத்தாக்க வந்த சிங்கத்தை அவன் சர்வ சாதாரணமாக விரட்டிய போது அவனது வீரம் அவளுக்குப் புரிந்தது. அவனது குணத்தைக் கண்டறிய விரும்பி, அவன் அறியாவண்ணம் அவனைப் பின் தொடர்ந்தாள்.

காட்டின் நடுப்பகுதியில் ஒரு குடிலில், பார்வையற்ற தம்பதியரை அவன் கனிவோடு கவனித்துக் கொள்வதை கண்டாள். அவனைவிடச் சிறந்த குணமுடையவன் இருக்க முடியாது என்று முடிவு செய்து குடிலின் அருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அந்த இளைஞன் பெயர் சத்தியவான் என்றும், வயதான தம்பதியர் அவனது பெற்றோர் என்றும் அறிந்துகொண்டாள். அவர்களது நாட்டை பகைவர்கள் கைப்பற்றியதால் இப்படிக் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டு நாடு திரும்பினாள். தன் தந்தையான அசுவபதி மன்னனிடம் விவரங்களைக் கூறி, தனது விருப்பத்தையும் தெரிவித்தாள். மனம் மகிழ்ந்த அசுவதி திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்தார். அப்போது அங்கு வந்த நாரதர், சத்தியவான் மிகச் சிறந்த குணவான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவனது ஆயுட்காலம் இன்னும் ஒரே ஒரு ஆண்டுதான். அதனால் இந்தத் திருமணத்தை நடத்தாதே என்று அறிவுரை கூறினார். இளவரசியான சாவித்திரி, முனிவரை வலம் வந்து வணங்கினாள். முனி சிரேஷ்டரே! நான் மனதால் சத்தியவானை கணவனாக வரித்துவிட்டேன். அவரையே தான் மணப்பேன். ஆனால் அவரது ஆயுள் நீடிக்க நீங்கள்தான் வழி சொல்லி, அருள வேண்டும் என்று வேண்டினாள். மனம் மகிழ்ந்த நாரதர், தேவ கன்னியர்க்கு அன்னை சக்தி உபதேசித்த காமாட்சி விரதத்தை உபதேசித்தார். சாவித்திரி - சத்தியவான் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

சாவித்திரியின் காட்டு வாழ்க்கை: அதுவரை செல்வச் செழிப்பில் வாழ்ந்த சாவித்திரி, கணவனுக்காக அத்தனையும் துறந்து காட்டுக்கு வந்தாள். மாமியார் மாமனாரை கண்போல கவனித்துக்கொண்டாள். அவர்கள் மனம் கோணாமல் பணிவிடைகள் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தாள். ஆனந்தமாகக் காலம் ஓடியது. திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற நான்கு நாட்களே இருந்தன. இதுதான் காமாட்சி விரதம் மேற்கொள்ள தக்க சமயம் என்று உறுதி செய்துகொண்டாள், கணவனிடமும் மாமனார் மாமியாரிடமும் விரதத்தைப் பற்றிக் கூறினாள். தொடர்ந்து மூன்று பகல் மூன்று இரவு உறங்காமல் இறைவனை வழிபட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் உண்ணலாம். கட்டாந்தரையில் படுக்க வேண்டும். என்பது போன்ற கடினமான விரத முறைகளைக் கேட்ட முதியவர்கள், உன்னால முடியுமா? நீ மிகவும் மென்மையானவளாயிற்றே? என்று கேட்டார்கள். சாவித்திரி, மன உறுதி தான் முக்கியம். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம் எனக்கு அனுமதி கொடுங்கள்! என்று கேட்டு அனுமதி வாங்கினாள். சத்தியவானும் சம்மதித்தான்.

சாவித்திரி விரதத்தைத் தொடங்கினாள். கார் காலத்தில் விளைந்த பச்சரிசியைக் குத்தி மாவாக்கி அதோடு இனிப்பு சேர்த்து அடையாகச் செய்து அதனை மட்டுமே உணவாகக் கொண்டாள். மஞ்சள் சரட்டில் பூவும் மஞ்சளும் சேர்த்து அதனை கலசத்தில் கட்டினாள். இரவும் பகலும் உறங்காமல் கண் விழித்திருந்தாள். இப்படியே மூன்று நாட்கள் சென்றன. நான்காம் நாள் காலையிலேயே சத்தியவானின் முகம் சோர்வாக இருந்தது. அவனுக்கு லேசாக மார்பு வலிப்பதாகக் கூறினான். தானும் அவனோடு காட்டுக்கு வருவதாகச் சொல்லி சென்றாள். அங்கே மதிய நேரத்தில் நெஞ்சு வலி தாங்காமல் சாவித்திரியின் மடியில் அப்படியே படுத்துக்கொண்டு விட்டான் சத்தியவான்.

எருமை வாகனத்தில் முறுக்கிய மீசையோடு கறுப்பான ஒருவர் வருவது சாவித்திரியின் கண்களுக்குத் தெரிந்தது. அவளது கற்புத்திறனாலும் மன உறுதியாலும் எமனை நேருக்கு நேர் பார்த்தாள். கணவனது உயிருக்காக மன்றாடினாள் அந்த மங்கை. ஆனால் கடமை தவறாத காலன் பாசக்கயிற்றை வீசி, சத்தியவானின் உயிரைக் கவர்ந்து சென்றான். விரத மகிமையாலும் கற்பு நெறியாலும் எமனைத் தொடர்ந்து செல்லும் வல்லமை பெற்றாள் அம்மாதரசி, அதைப்பார்த்த எமனுக்கு ஆச்சரியம். பெண்ணே, அனுமதி இல்லாமல் உன்னால் எமனுலகில் நுழைய முடியாது உன் தைரியத்தை மெச்சி ஒரு வரம் அளிக்கிறேன், திரும்பிப்போய் விடு! என்றார்.

சாவித்திரி, ஐயா! கண் தெரியாத என் மாமனார் மாமியாருக்குக் கண் தெரியவேண்டும். அவர்களுக்கு அவர்களது ராஜ்ஜியம் திரும்பக் கிடைக்கவேண்டும் என்று வேண்ட, அப்படியே ஆகட்டும் என் அருளினார் எமன். அதன் பிறகு விடாமல் அவள் பின் தொடர்வதைப் பார்த்துவிட்டு திகைத்தார் எமதர்மராஜன். பெண்ணே, நீ அபூர்வமானவள் என்பதில் ஐயமில்லை உனது கற்புத் திறமையைப் பாராட்டி இன்னொரு வரம் கேள், தருகிறேன் என்றார். சாவித்திரியும், ஆண் வாரிசே இல்லாத என் தந்தைக்கு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் என்றாள். அந்த வரத்தையும் கொடுத்த காலன் மேலும் சென்றார். அப்போது விடாமல் தொடர்ந்தாள் சாவித்திரி. எமபுரியின் வாயில் வந்துவிட்டது. இனியும் அவள் தன்னைத் தொடர்ந்தால் பிரச்னைகள் வரலாம் என்று நினைத்த எமன், அம்மா, கடைசியாக உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன். அதை வாங்கிக்கொண்டு நீ திரும்பி விடவேண்டும் என்றார். சாவித்திரியும் சம்மதித்து, என் கற்பு நிலை கெடாமல் எனக்கு புத்திர பாக்கியம் அருளவேண்டும் என்றாள். யோசிக்காத எமனும் உடனே அதை வழங்கிவிட்டார். ஐயா! என் கணவர் இல்லாமல் எனக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவது எப்படி? எனக் கேட்க, திகைத்து விட்டார் எமன். அவளது சாதுர்யத்தையும் விடாமுயற்சியையும் பாராட்டி சத்தியவானின் உயிரைத் திருப்பிக் கொடுத்தார்.

கணவனோடு நாட்டுக்குத் திரும்பிய சாவித்திரி, சகல சவுபாக்கியங்களோடு பல குழந்தைகளைப் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். அவளது ஆனந்த வாழ்வையும் கணவனை மீட்ட கதையையும் கேட்ட பல பெண்கள் அந்த நோன்பைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டு தாங்களும் விரதமிருந்தனர். அப்போது முதல் பாரத தேசத்தில் காமாட்சி அம்மன் நோன்பு சாவித்திரி விரதம் அல்லது காரடையான் நோன்பு என்ற பெயரில் வழங்கி வருகிறது.

விரதம் இருக்கும் முறை: மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில்தான் பூஜை செய்யவேண்டும் என்றாலும், மூன்று நாட்கள் முன்னதாகவே முன்னேற்பாடுகளைத் தொடங்கிவிடவேண்டும். வெண்கலம், செம்பு அல்லது வெள்ளிக் கலசத்திற்கு குங்குமம், சந்தனம் வைத்து தூய நீரை நிரப்பி அதன் வாயை மஞ்சள் தடவிய தேங்காய் மற்றும் மாவிலைகளால் மூடவேண்டும். பூஜையறையில் அதனை கோலம் போட்ட மணையில் வைத்து அதற்கு பூ மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். இயலாதவர்கள், தெரிந்த துதியைச் சொல்லி வணங்கலாம். இந்த விரத நாட்களில் அசைவ உணவை அறவே தவிர்த்து விடுவது நல்லது. மதியம் கட்டாயம் உறங்கக்கூடாது. எண்ணெயில் பொரித்த பண்டங்களை உண்ணக்கூடாது. மூன்று நாட்கள் கழித்து மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை நீராடி அன்னையை வணங்கி லலிதா சகஸ்ரநாமம் சியாமளா தண்டகம், லலிதா நவரத்தின மாலை போன்ற துதிகளைச் சொல்லலாம் அல்லது ஒலிக்கவிடலாம். பச்சரிசி மாவில் காராமணி கலந்து வெல்லம், சேர்த்துத் தயாரிக்கப்படும் அடைகளை நிவேதனம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் வீட்டில் எத்தனை சுமங்கலிப் பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை மஞ்சள் சரடுகளை எடுத்து அதில் பூவும் மஞ்சளும் சேர்த்து முடிந்து வைக்க வேண்டும். அந்தச் சரட்டை கலசத்தில் கழுத்தில் கட்டவேண்டும். குங்குமம், அட்சதை மலர்களால் கலசத்துக்கும் பராசக்தியின் படத்துக்கும் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை முடிந்ததும் நுனி இலையில் ஐந்து காரடைகள் சிறிது வெண்ணெய் இவற்றை வைத்து அம்பாளுக்கும் கலசத்துக்கும் நிவேதனம் செய்ய வேண்டும். வீட்டில் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை இலைகள் போட வேண்டும். சிறிது தண்ணீரை இலைகளைச் சுற்றித் தெளித்து, உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் நோற்றேன். ஒரு நாளும் என் கணவன் என்னைப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி வேண்டிக்கொள்ள வேண்டும்.

பூஜை முடிந்ததும் வயதான சுமங்கலி அல்லது நாமே சாவித்திரியின் கதையை குடும்பத்தினர் அனைவருக்கும் படித்துக்காட்ட வேண்டும். பின்னர் வீட்டுப் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி மஞ்சள் சரடை கட்டிக் கொள்ள வேண்டும். கல்யாணமாகாத பெண்கள் கைகளில் கட்டிக்கொள்ளலாம். நிவேதனம் செய்த நோன்படைகளில் சிறிதை குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்துவிட்டு நாம் உண்ணலாம். அந்த நோன்பு அடைகளில் கொஞ்சத்தை பசுமாட்டிற்கு அளித்து மலை ஏறி புல் மேய்ந்து, மடு இறங்கி தண்ணீர் குடிக்கும் கோமாதாவே எனக்கு குறைவிலா சவுபாக்யம் தா என வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பூஜையைக் கடைப்பிடித்தால் தாலி பாக்கியம் நிலைக்கும். கணவரது ஆரோக்கியம் சீராகும். செல்வம், மகிழ்ச்சி ஆகியவை இல்லத்தில் நீங்காமல் இடம்பிடிக்கும். காரடையான் நோன்பு என்கிற சாவித்திரி விரதம் மார்ச் மாதம் அன்று பெண்கள் அனைவரும் சாவித்திரி விரதத்தைக் கடைபிடித்து காமாட்சி அம்மன் அருளால் தீர்க்க சுமங்கலிகளாக சகல சவுபாக்கியங்களுடன் புகழோடு நீடு வாழ்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !