உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு வெண்கல மணி இஸ்லாமியர்கள் காணிக்கை

கோவிலுக்கு வெண்கல மணி இஸ்லாமியர்கள் காணிக்கை

ஆர்.கே.பேட்டை: அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலுக்கு, வெண்கல மணியை இஸ்லாமியர்கள் காணிக்கையாக வழங்கினர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தின் தென்மேற்கில் உள்ளது நெல்லிக்குன்றம் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில். ஓராண்டுக்கு முன், கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மலைக்கோவிலுக்கு, வாகனங்கள் செல்லவும், நடந்து செல்லவும், தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நித்ய பூஜைகள், கிருத்திகை உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. ஆடிக்கிருத்திகையில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கின்றனர். இந்த கோவிலுக்கு, திருவள்ளூரைச் சேர்ந்த, ஆயிஸ் பாஷா, நுார் பாஷா ஆகியோர் இணைந்து, 55 கிலோ எடை கொண்ட வெண்கல மணியை காணிக்கையாக வழங்கினர். விரைவில், இதற்கான ஸ்தம்பம் நிறுவப்பட்டு, கோவில் மணி நிறுவப்படும். பூஜை நடப்பதை ஊருக்கு தெரியப்படுத்தும் விதமாக, இந்த கோவில் மணி ஒலிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !