உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸன்னிதானம் சுவாமிகளுக்கு பண்ணாரியில் சிறப்பான வரவேற்பு

சிருங்கேரி ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸன்னிதானம் சுவாமிகளுக்கு பண்ணாரியில் சிறப்பான வரவேற்பு

சத்தியமங்கலம்: சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள் ஸ்ரீபாரதீ மஹாஸன்னிதானம் மற்றும் ஸ்ரீவிதுசேகர பாரதீ ஸன்னிதானத்துக்கு, பண்ணாரியில் பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிருங்கேரி ஸ்ரீஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸன்னிதானம், அவர் சீடர் ஸ்ரீவிதுசேகர பாரதீ ஸன்னிதானம், தமிழகத்தில் பல்வேறு ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, தாளவாடி வழியாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிக்கு, நேற்று மாலை, 5:30 மணியளவில் வந்தடைந்தனர். பக்தர்கள், சீடர்கள் சார்பில் கும்ப மரியாதையுடன் இருவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, பழனி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து, பக்தர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு முடிந்து, பண்ணாரி மண்டபத்தில் சுவாமிகள் இருவரும் அமர ஆடிட்டர் ராமநாதன் வரவேற்புரை வாசித்தார். இதையடுத்து பக்தர்கள் ஆசி பெற்றனர். இதை தொடர்ந்து சத்தியமங்கலம் சிருங்கேரி சங்கரமடத்திற்கு சென்ற அவர், தூலிபாத பூஜை செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சத்தியமங்கலத்தில் இன்று (15ம் தேதி) காலை, 9:30 மணிக்கு, ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகத்தில் மஹா சன்னிதானம் பங்கேற்கிறார். மாலை, 5:00 மணியளில் சத்தியமங்கலம் ஏ.வி.எஸ்., மஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில், பக்தர்கள், சீடர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !