உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டல் கோவில்களில் சூரசம்ஹார விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திண்டல் கோவில்களில் சூரசம்ஹார விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஈரோடு: ஈரோடு திண்டல் முருகன் கோவிலில், சஷ்டியின் ஆறாம் நாளான நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு திண்டல் முருகன் கோவிலில், அக்டோபர் 27ம் தேதி துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு யாகபூஜையும், 10 மணிக்கு பால் அபிஷேகம், பால்குட கிரிவலமும் நடந்தது. மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்து வந்தனர். பால்குட கிரிவலத்தை தொடர்ந்து, பகல் 12.10 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை மாலை 6 மணிக்கு நடந்த, சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.45க்கு சிங்கமுஹாசூரன், தாரகாசூரன், அஜமுகி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு முருகன் மலையேறுதல் நிகழ்ச்சியும், கோவிலை சுத்தம் செய்தலும் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியை அடுத்து, இன்று காலை 9 மணிக்கு, வேலாயுத ஸ்வாமிக்கும், தெய்வநாயகி, வள்ளி நாயகிக்கும், கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12.10 மணிக்கு மேல், திருக்கல்யாண விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் தனபாலன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சூரசம்ஹார விழா அக்., 26 தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. யாகசாலை பூஜை, தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. சூரசம்ஹாரத்துக்காக சிலர் சூர வேடம் அணிந்திருந்தனர். கோபி வேங்கம்மையார் பள்ளி அருகில் தாரகாசூரன், வன்னியர்குலமாரியம்மன் கோவில் அருகே பாணுகோபன், மேட்டுவளலில் சிங்கமுகாசூரனும், முத்துவேலப்ப கவுண்டர் வீதியில் சூரசம்ஹாரமும் நடந்தது.

பவானி: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் சன்னதியில், நேற்று காலை 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். காங்கேயம்: காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 27ம் தேதி அபிஷேக, ஆராதனையுடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 10.30க்கு சுப்பிரமணிய ஸ்வாமி, மலையிலுள்ள மண்படத்துக்கு எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு சூரசம்ஹார விழா, மலையடிவாரத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கிழக்கு வீதியில் கஜமுகாசூரன், தெற்குவீதியில் இரவு 7.15 மணிக்கு சிம்மமகா சூரன், மேற்கு வீதியில் இரவு 9.30க்கு ஒளிமகாசூரன், வடக்கு வீதியில் இரவு 11 மணிக்கு சூரபத்மன் சம்ஹாரம் நடந்தது. மலையடிவாரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில், இன்று காலை 10.30க்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. பகல் 1 மணிக்கு திருவீதியுலா, மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி, காலை அபிஷேக ஆராதனை, மாலை 4.30க்கு திருவீதியுலா நடக்கிறது. இரவு ஸ்வாமி திருமலைக்கு எழுந்தருளலும், பாலிகை நீர்த்துறை சேர்த்தலும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நடராஜன், தக்கார் பழனிக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !