திரவுபதிஅம்மன் தீமிதி திருவிழாவில் நாளை அர்ச்சுனன் தபசு
ஆர்.கே.பேட்டை : பொதட்டூர்பேட்டை திரவுபதிஅம்மன் தீமிதி திருவிழாவில், நாளை மதியம் அர்ச்சுனன் தபசு நடக்கிறது. வரும். ஞாயிற்றுக்கிழமை காலை, துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடக்கிறது. பொதட்டூர்பேட்டை திரவுபதிஅம்மன் உடனுறை தர்மராஜா கோவில், தீமிதி திருவிழா நடந்து வருகிறது. தினசரி மதியம், மகாபாரதம் சொற்பொழிவு, இரவில், தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. அம்மனுக்கு திரளான பக்தர்கள், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.நாளை, மதியம், 12:00 மணிக்கு, முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் தபசு நடைபெற உள்ளது. இதில், துரியோதனன் வேடம் தெருக்கூத்து கலைஞர், தபசு மேற்கொள்ள உள்ளார். அவருடன் சேர்ந்து, காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள பெண் பக்தர்களும், தபசு செய்கின்றனர்.வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடக்கிறது. இதில், துரியோதனனை, பீமசேனன் வதம் செய்யும் நிகழ்வு தெருக்கூத்துகலைஞர்களால் நடத்தப்படுகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடக்கிறது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். வரும் திங்கள் கிழமை, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன், திருவிழா நிறைவு பெறுகிறது.