ஹரிகதா காலட்சேபம், உபந்யாசம், ப்ரவசனம் - என்ன வித்தியாசம்?
காலட்சேபம் என்றால், பொழுதுபோக்குவது என்று அர்த்தம். ப்ரவசனம் என்றால் கேள்விக்கு அல்லது சந்தேகத்துக்கு பதில் சொல்வது. அதாவது, அடுக்குமொழி என்று பொருள். உபந்யாசம் என்றால், உப சமீபே நியாசம். அதாவது, பக்கத்தில் வைப்பது என்று பொருள். ஹரிகதா காலட்சேபம் என்பது, நின்றபடி, கையில் சப்ளாக்கட்டை வைத்துக் கொண்டு செய்யும் முறை. இது மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரு சம்பிரதாயம். மகாராஷ்டிர மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபோது, அவர்களுடன் வந்த ஒரு கலை. ஒரிஜினலா வந்த பழக்கம் என்பது, அமர்ந்து கொண்டு ப்ரவசனம் செய்வது. ப்ரவசனம் என்பது நம் மனசில் ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் சொல்வது. உபந்யாசம் என்பது உயர்வானது. கேட்பவர்களின் மனதை பகவானுக்குப் பக்கத்தில் வைப்பது. அப்படி பகவான் அருகில் வைக்க வேண்டும் என்றால், யாருக்கு அந்தத் திறமை இருக்கிறதோ அவர்கள்தான் வைக்க முடியும்.
நாம் அதுபோன்று உபந்யாசத்தைக் கேட்பது எப்படித் தெரியும் என்றால், இரண்டு மணி நேரம் நம் மனம் பகவானிடம் இருப்பது போன்ற எண்ணம் நமக்கு தெரிய வேண்டும். ஒருவரை சிரிக்க வைப்பது பெரிய விஷயம் இல்லை. ஒருவர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவைப்பது என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். உபந்யாசத்தின் நோக்கமே, கேட்பவன் மனது உருகி, பகவத் தியானத்தினாலே கண்ணில் இருந்து நீர் வர வேண்டும். அதனால்தான் உபந்யாசம் சிறந்ததாகிறது.