நன்மை தரும் 108 விநாயகர்
எதையும் முன் முதலாகத் தொடங்குவதற்கு முன்பு, பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவது மரபு. பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்துக்குப் பிரம்மன். உகரத்துக்குத் திருமால், மகரத்துக்கு ருத்திரன், பிந்துவுக்கு மகேசன், நாதத்துக்குச் சிவன் என்று விரிவுபடுத்தி பொருள் சொல்கின்றனர். ஆக, ஐந்து தெய்வ வணக்கங்களும் பிள்ளையார் சுழிக்குள் அமைந்து விடுகிறது. விநாயகர் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தி.
திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில், கோபால சமுத்திரக்கரை என்னுமிடத்தில் அமைந்துள்ளது நன்மை தரும் 108 விநாயகர் கோயில். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கோபால சமுத்திரக் குளக்கரை அருகே, மிகச் சிறிய கோயிலில் தனித்த விநாயகராக எழுந்தருளி இருந்தார், திண்டுக்கல் விநாயகர். தொண்டன் மருதநாயகம் என்பவருக்கு, கோபால சமுத்திரக்கரை விநாயகர் மீது தீராத பக்தி. 1967ல் நாள் எட்டணாவுக்குச் சுண்ணாம்பு வாங்கிக் கோயில் சுவருக்கு வெள்ளையடித்து, மறுநாள் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தவருக்கு, 2001ல் கோயிலில் ஒரு அசரீரி கேட்டுள்ளது. இதே இடத்தில் நூற்றியெட்டு விநாயகரை வைத்து வழிபட வேண்டும் என்று. அப்போதே திருவுளச்சீட்டு போட்டு விநாயகர் முன்பாக அதற்கு உத்தரவும் பெற்றுக் கொண்டார் மருதநாயகம்.
மூலவர், நன்மை தரும் விநாயகர் உட்பட, நூற்றியெட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்னர், திண்டுக்கல் நகர மக்களுக்கு மட்டுமல்ல, வெளியூர் மக்களுக்கும் மிக முக்கிய வழிபாட்டுத் தலமாக இது மாறிப்போனது. ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் திருவுருவ கற்சிலை இங்குதான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்பது இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு. 200 டன் எடை கொண்ட ஒரே கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்டது. திருமுருகன் பூண்டி முருகன் சிற்பக் கலைக்கூடத்தினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதினைந்து சிற்பிகள் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர். இருபத்தி ரெண்டு அடி உயரம். பன்னிரெண்டு அடி அகலம். பீடம் நான்கடி. இவற்றைத் தாங்கிக்கொள்ள தரையிலிருந்து ஆறு அடி உயரத்துக்கு கருங்கல் பீடம். மொத்தம் 32 அடி உயரம் கொண்ட மகத்தான விநாயகர் இவர்.
அருள்மிகு அண்ணாமலையார் உண்ணமுலையம்மன் தெய்வீகப்பணி மற்றும் தர்ம பரிபாலன அறக்கட்டளை, இந்த கோயிலினை நிர்வகித்து வருகிறது. இந்த விநாயகப் பெருமானை வழிபட, சகல சவுபாக்கியங்களும் பெற்று சந்தோஷமாக வாழலாம்.