முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்!
ஈரோடு:ஈரோட்டில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.ஈரோடு, திண்டல் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, அக்டோபர் 27ல் துவங்கியது. 28ல் யாகபூஜையும், அபிஷேகம், தீபாராதனையும், 29ல் ருத்ரபாராயணம், சங்காபிஷேகமும், 30ல் சண்முகார்ச்சனை நடந்தது. சஷ்டியின் ஆறாம் நாளான அக்டோபர் 31 மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை கோவில் வளாகம் முழுவதையும், கோவில் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அதன் பின், பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாண உற்சவத்துக்கான ஏற்பாடுகள் நடந்தது.மணமக்கள் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன், முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10.30 மணிக்கு, வள்ளி, தெய்வானை, முருகனின் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது, பக்தர்கள் எழுப்பிய "அரோகரா கோஷம், திண்டல் கோவிலை அதிர வைத்தது.ஈரோடு காவிரி ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை, வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணி ஸ்வாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலில் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் கயிறு பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு மலையடிவாரத்திலும், ராஜ வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, ராஜவீதி கைலாச நாதர் கோவிலில் வைத்து, திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பவானி: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி சன்னதியில், சூரசம்ஹார நிகழ்ச்சியின் நிறைவாக, நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது.