கந்தசஷ்டி கல்யாண உற்சவ விழா பக்தி "மழையில் நனைந்த மக்கள்!
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சண்முகநாதருக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிவாச்சாரியார், சண்முகநாதருக்கு மாலை அணிவித்தார். மற்றொருவர், வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்.திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டவாறே சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், அலங்கார பூஜைகள் நடந்தன. திருக்கல்யாண உற்சவ ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் செய்திருந்தார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் நான்கு ரத வீதிகளிலும் சூரன்களை வதம் செய்யும் வைபவத்தை சிவக்குமார சிவாச்சாரியார் நிகழ்த்தினார். நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பொங்கலூர்: அலகுமலை முருகன் கோவிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு, முருகப்பெருமான், பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சூரபத்மன் முக்கிய வீதிகள் வழியாக அலகுமலை அடிவாரத்தை வந்தடைந்தான். மலையடிவாரத்தின் தெற்கு பகுதியில் துவங்கி நான்கு இடங்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு உருவங்களில் வந்த சூரனை முருகன், வேலால் வதம் செய்தார். நேற்று, திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதியுலா நடந்தன.