திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கொடியேற்றம்
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தர நாயகியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்னகத்து காசி, புஷ்வனத்து காசி என புகழப்படும் திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்தர நாயகியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். சிவகங்கை தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக் கோயிலில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. காலை பத்து மணிக்கு கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் தொடங்கின. காலை 10:15 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடந்தது. கொடியேற்ற வைபவத்தை செந்தில் பட்டர், கண்ணன் பட்டர் நடத்தினர். ஏழாம் தேதி காலை பத்து மணிக்கு திருக்கல்யாணம், 8ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட பக்தர்கள் செய்து வருகின்றனர்.