உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமி: நன்மையும் செல்வமும் நாள்தோறும் கிட்டும்!

ராமநவமி: நன்மையும் செல்வமும் நாள்தோறும் கிட்டும்!

தர்மத்தைக் காக்க ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்கள் பல. அவற்றுள், உலகம் முழுவதும் போற்றிப் புகழ்வதும் நிலைத்த புகழ் பெற்றதுமான அவதாரம், ராம அவதாரம். அனந்த சயனனின் எல்லா அவதாரங்களும் அரக்கர்களை அழிக்கவும், நன்மையை நிலை நாட்டவும் ஏற்பட்டவைதான். மச்சாவதாரம் தொடங்கி கிருஷ்ணாவதாரம் வரையிலும் அப்படித்தான் என்றாலும், ராமாவதாரத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. ராம என்ற நாமத்தை உச்சரித்தாலே பாவங்கள் போகும், ஆத்ம பலம் பெருகும் என்பது எல்லோருக்கும் தெரியும். தாரக மந்திரமான அந்தத் திருநாமம், ராமர் பிறப்பதற்கு முன்னாலேயே பிறந்து விட்டது என்பது தனிச் சிறப்பு அதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பரத்வாஜ முனிவர்: ஒரு நாள் பரத்வாஜ் முனிவர், நாரதரை சந்தித்தார். அப்போது அவர், முப்பத்து இரண்டு வகையான கல்யாண குணங்களையும் உடைய மானுடன் யாராவது இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் அவனால் இந்த உலகில் வாழமுடியுமா? என்று கேட்டார். அவர் மூலம் திருமால் தனது லீலையைத் தொடங்கிவிட்டார் என்று புரிந்துகொண்டார் நாரதர். எனவே, இதுவரை அப்படி ஒருவர் இல்லை. என்றாலும், பெருமாளின் இச்சைப்படி, அப்படி ஒரு அவதாரம் நிகழ்ந்தால் அந்த அவதாரத்துக்கு நீங்கள் என்ன பெயர் கொடுப்பீர்கள்? என்று கேட்டார் நாரதர்.

முனிவர், அப்படி ஒரு மானிடன் அல்லது அவதாரம் வந்தால் அவனது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அன்பும் சக்தியும் பொங்க வேண்டும்; தேக பலம், புத்தி பலம் பெருக வேண்டும். அப்படிப்பட்ட பெயராகத்தான் இருக்க வேண்டும்! ஆனால், அப்படி ஓர் அவதாரம் சீக்கிரமே நிகழ வேண்டும்! என்றார். நாரதர் நகைத்தார், சிறப்பானதொரு பெயரையே உங்களால் உடனே சொல்ல முடியவில்லையே? அப்படி இருக்க நாராயணனால் மட்டும் உடனடியாக அப்படி அவதாரம் எடுக்க முடியுமா? முதலில் நீங்கள் பெயரைக் கண்டுபிடியுங்கள். பிறகு பார்க்கலாம்! என்று சொல்லிச் சென்று விட்டார். பரத்வாஜ முனிவரும் கடுமையான தவம் இயற்றினார். காற்றில் இருக்கும் பக்தி அதிர்வலைகளைக் கிரகித்து, இறைவன் அருளால் அதில் இருந்த ராமா என்னும் பெயரை அறிந்து கொண்டார். நாராயணரும் அந்தப் பெயருக்கு ஆற்றலும் அன்பும் சேர்த்தார். இனி அதவதாரம் செய்ய வேண்டியதுதான் மீதம். அதேசமயம், அப்படி ஒரு சிறப்பான அவதாரம் நடக்கும் போது அவரைப் பற்றிய காவியம் உருவானால்தானே நல்லது? பிற்காலத்தில் வரும் மக்கள் அதைப் படித்து நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வார்கள்? என்று யோசனை செய்தார் மகரிஷி நாரதர்.

வால்மீகி முனிவர்: ராமரது அவதாரம் நிகழும் முன்பே அவரது கதையைக் காவியமாக வடிக்க நாரதரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் வால்மீகி முனிவர். ஆனால் அவர் அப்போது முனிவராக தவ வாழ்க்கை வாழவில்லை. ரத்னாகரன் என்ற பெயரில் காட்டில் பயங்கரமான கொள்ளைக்காரனாக விளங்கினார். ரத்னாகரனைக் கண்டாலே அனைவரும் பயந்தனர். வழிப்பறி செய்து பணம் சேர்த்து தனது பெரிய குடும்பத்தைக் காப்பாற்றினான் அவன். அவனை நல்ல பாதையில் திருப்ப ஒரு நாடகம் நடத்தினார் நாரதர், வயதான வழிப்போக்கனைப் போல வேடமிட்டுக்கொண்டு ரத்னாகரன் வாழும் காட்டு வழி சென்றார். எதிர்பார்த்தவாறே அவரை வழிமறித்தான் கொள்ளையன். அன்பு பொங்க அவனைப் பார்த்தார் நாரதர், அப்பா! உன் ஒருவனுக்காக எதற்கு இத்தனை பேரைக் கொள்ளை அடிக்கிறாய்? என்றார் நான் ஒருவன் அல்லவே? எனக்கு இரு மனைவியரும், பல குழந்தைகளும் இருக்கின்றன. அவர்கள் வயிறு நிறைய வேண்டமா? அவர்கள் ஆடை, ஆபரணங்கள் அணிய வேண்டாமா? அதற்காகத்தான் நான் கொள்ளையடிக்கிறேன்! என்றான் ரத்னாகரன்.

அவனை நோக்கிப் புன்னகைத்தார் மகரிஷி அப்பனே! நீ அவர்களுக்காக கொள்ளையடிக்கிறேன் என்கிறாய் சரிதான். ஆனால் கொள்ளையடிப்பதால் உனக்கு மிகுந்த பாவம் சேர்கிறதே? நீ நரகத்துக்குத்தானே போக வேண்டும்? உன் பாவத்தில் பங்கு கொள்ள உன் குடும்பத்தார் வருவார்களா? கேட்டுச் சொல்வேன்! என்றார். அவர் சொன்னதைக் கேட்டு வீடு சென்ற ரத்னாகரன், மனைவியரையும், குழந்தைகளையும் பார்த்து, என் பாவத்தில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்வீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் உடனே மறுத்து விட்டார்கள். அதை அப்படியே சென்று நாரத முனிவரிடம் சொன்னான். அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. காரணம் அவர்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை! அதைத்தான் நீ செய்கிறாய். ஆனால் உழைத்துக் காப்பாற்றுவதற்குப் பதிலாக இப்படிக் கொள்ளையடித்து பாவத்தை சுமக்கிறாய். உன் பாவத்தின் ஒரு பகுதியைக் கூட உன்னால் நன்மை பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார் நாரதமுனி.

மனம் மாறிய ரத்னாகரன், ஐயனே! என் பாவம் நீங்க, நானும் நல்ல வழியில் நடக்க என்ன செய்ய வேண்டும்? என்று வேண்டினான். நாரதர் நாம நாமத்தை உபதேசித்து, இதனை தியானித்து வா! உனக்கு ஞானம் பிறக்கும்! என்று சொல்லி மறைந்தார். ரத்னாகரன் ராம என்று சொல்லத் தெரியாமல் மரா மரா என்று மாற்றி ஜபித்தான் அது எதிரொலிபோல ராமா ராமா என்று ஒலித்தது. பல காலம் அப்படியே தவம் செய்தான். அவனைப் புற்று மூடியது. ராம நாமத்தை ஜபித்ததால் கொள்ளைக்காரனுக்கு ஞானம் பிறந்தது. களி பாடும் திறமை வந்தது. தவம் செய்யும் போது புற்று மூடியதால் அவர் வால்மீகி என்று அழைக்கப்பட்டார். பின்னர் மிகச் சிறந்த முனிவராகி ராமாயணத்தை எழுதினார். ராமாயணம் என்ற மகா காவியம் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்ததே ராம நாமம்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !