இஞ்சிமேடு கோவிலில் நாளை பவித்ரோத்சவம்!
செஞ்சி : இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை பவித்ரோத்சவம் ஆரம்பமாகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சி மேட்டில் பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வரதராஜர், ராமர், கல்யாண லட்சுமி நரசிம்மர், பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் நாளை (5ம் தேதி) முதல் 8ம் தேதி வரை உலக நன்மைக்காக திருபவித்ரோத்சவம் நடத்த உள்ளனர். இதை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்கின்றனர். தொடர்ந்து இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு ஹோமமும், தினமும் ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்க உள்ளனர். வரதராஜர், பெருந்தேவி தாயார், ராமர், சீதா தேவி, லட்சுமணர், கல்யாணவரத ஆஞ்சநேயர், கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு பவித்ரோத்சவ அலங்கரம் செய்ய உள்ளனர். விழா ஏற்பாடுகளை இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.