பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள, போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சி அடுத்துள்ள போடிபாளை யம், குளத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த மாதம், 27ம் தேதி குண்டம் திருவிழா துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, கோவில் பூவோடு நிகழ்ச்சி துவங்கியது. பல்வேறு கோவில்களில் இருந்து
பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார வழிபாடு செய்தனர். கடந்த, 10ம் தேதி, பக்தர்கள் பூவோடு எடு க்கும் நிகழ்ச்சி நடந்தது. போடிபாளையத்தில் இருந்து,
கோவிலுக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்றுமுன்தினம் காலை பூக்குண்டம் திறக்கப்பட்டு, இரவில் குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. நேற்று காலை, 7:00
மணிக்கு அம்மனுக்கு போடிபாளையத்தில் இருந்து அக்னி கும்பம் முத்திரித்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதன்பின், பூக்குண்டத்தில் பூச்சென்டு மற்றும் எலுமிச்சை பழம்
உருட்டப்பட்டது. கோவில் மாயவர் பூக்குண்டம் இறங்கி, உருட்டிய பூச்சென்டை எடுத்துச்சென்றார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் இறங்குதலை முன்னிட்டு, வெண்ணெய்
காப்பு சிறப்பு அலங்காரத்தில், பத்ரகாளியம்மன் அருள்பாலித்தார். குண்டம் இறங்குதலை தொடர்ந்து, அன்னதானமும், மாவிளக்கு வழிபாடும் நடந்தது.