உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்ரித் ஸ்பெஷல் கவிதைகள்!

பக்ரித் ஸ்பெஷல் கவிதைகள்!

உன் இசைவின்றி...

திரும்பும்
திசையெங்கும் இருப்பவனே
விரும்பும்
விஷயத்தை
கொடுப்பவனே
உன்
இசைவின்றி ஓர்
இலையும் அசையாதே
உன் ஆசையின்றி ஓர்
மனமும் பிசையாதே...
உன்னை நாடி
உண்மை தேடி
வருவோர் கோடி...
நானும் வரவே
நாளும் அழுது
கேட்டேன் பாடி...
இம்மையில்
கண்டு விட்டால்
உன் இல்லம்...
மறுமையில்
குளிர்ந்திடுமே...
என் உள்ளம்...
- என். ரபீக் அஹ்மத்

ஷைத்தான் தோற்றான்...

இறைவனின் தூதர்
இப்ராஹீம் நபி
இவ்வுலகில் கட்டிய முதல்
இறை இல்லம்...
கனவில் கேட்ட
இறைவனின் குரலுக்கு
தன்
கண்மணி மகனையே
அறுக்க துணிந்த
நம்பிக்கை
கருணைமிக்க இறைவன்
நபியின்
நதிபோன்ற
நம்பிக்கையை ஏற்றான்.
களங்கப்படுத்த
காத்திருந்த
ஷைத்தான் அன்றே தோற்றான்.
நமக்கு
நிறமில்லை...
மொழியில்லை...
தேசமில்லை....
எல்லைகளை மறந்து
எல்லாம் வல்ல
இறைவனை
நாடிச் செல்வோம்!
நாவெல்லாம் அவன்
புகழ்பாடிச் செல்வோம்!
- எஸ். முஹம்மத் தமீம்

மனிதரில் புனிதர்...

ஆதியும் நீ...
அந்தமும் நீ...
எங்களுக்கு
எல்லா சொந்தமும் நீ...
உன்
உன்அன்புக்கு
எல்லையில்லை...
உன்
அருளிருந்தால்
தொல்லையில்லை...
எங்கள்
கண்ணீரை
பன்னீராக மாற்றுபவனே...
எங்களை
மனிதரில்
புனிதராக மாற்று...
எங்கள்
அழுக்கு எண்ணங்களை...
ஆடம்பரத்தை...
அகம்பாவத்தை...
நாம் இந்த
தியாகத் திருநாளில்
அறுத்து எறிய
எங்களுக்கு
வழிகாட்டு!
- ரஹ்மதுல்லா

நேர்வழி

இருட்டில்
அலையும்
குருடராய் இருந்தோம்...
திருமறை
நமக்கு விழியானது...
ஆமைக் கூட்டத்தில்
ஊமையாய் இருந்தோம்...
நபி மொழி
நமக்கு மொழியானது..
செல்லும் பாதை
நேர்வழியானது...
சேரும் இடம்
அழகானது...
பசி, பஞ்சம், பட்டினி
ஒரு பக்கம்
தேவைக்கு மீறிய
செல்வம்
மறுபக்கம்
நியாயமற்ற
இந்த நிலைமாற
இறைவன் தந்த
தியாகத் திருநாளை
ஏழையுடன் சேர்ந்து
கொண்டாடுவோம்...
இருப்பதை
இல்லாதவருடன்
பகிர்ந்து பசியாறுவோம்!
-கே. பாரூக் அஹ்மத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !