தமிழ் ஆண்டை வரவேற்க காஞ்சிபுரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
காஞ்சிபுரம் : தமிழ் புத்தாண்டை வரவேற்க, காஞ்சிபுரத்தின் முக்கிய கோவில்களில், பக்தர்கள் குழுமினர். சிறப்பு வழிபாடுடன் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் கோலாகலமாக நடந்தன. தமிழகமெங்கும் நேற்று, தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நேற்று அதிகாலை முதலே துவங்கின. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், தமிழ் புத்தாண்டுக்கான சிறப்பு அபிஷேகங்கள், பல கோவில்களில் நடைபெற்றன. அதில், காமாட்சியம்மன் கோவில், குமரகோட்டம், ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் என, முக்கிய கோவில்களில், சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் காட்சிஅளித்தார்.
அதிகாலை 5:00 மணி முதல், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அபிஷேகம் செய்வதும், அர்ச்சனை செய்வதுமாக இருந்தனர்.கோவில்களுக்கு வந்த பக்தர்களுக்கு, அன்னதானமும் வழங்கப் பட்டது. கோவில்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் நகரில் உள்ள சில பூங்காக்களிலும் நேற்று மாலை கூட்டம் குவிந்தது. பிள்ளையார் பாளையம் பூங்காவில், நுாற்றுக்கணக்கானோர் குவிந்தனர். விடுமுறை தினம் என்பதால், தங்களின் பிள்ளைகளுடன் பூங்காக்களுக்கு சென்று பொழுதுபோக்கினர்.
வல்லக்கோட்டையில் கொண்டாட்டம்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவயான சமேத சுப்பிரமணிய சுவாமியை கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. முத்தங்கி அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் முருகனை வழிபட்டு சென்றனர்.