சபரிமலையில் இளம் பெண்கள் விசாரணைக்கு கேரளா உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், இளம் பெண்கள் சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, இது பற்றி விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல தடை உள்ளது; இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் சிலர் சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது பற்றி அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலில், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசையில், சில, இளம்பெண்கள் சென்றதாக புகார் வந்துள்ளது. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.