பாதாள காளீஸ்வரருக்கு வரும் 30ல் கும்பாபிஷேகம்
கொட்டையூர் : கொட்டையூரில் உள்ள சவுபாக்ய காமாட்சி அம்பாள் சமேத பாதாள காளீஸ்வரர் கோவிலில், வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டையூர் கிராமத்தில் உள்ளது, சவுபாக்ய காமாட்சி அம்பாள் சமேத பாதாள காளீஸ்வரர் கோவில். இங்கு, வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, வரும் 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் முதலியன நடைபெறும். பின். மாலை 5:00 மணிக்கு. பிரவேசபலி, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரமும், முதற்கால யாகசாலை பூஜையும் நடைபெறும். மறுநாள், 29ம் தேதி, காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு, புதிய சிலைகள், கோபுர கலசங்கள் பிரதிஷ்டையும், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தனமும் நடைபெறும்.
பின், மாலை 4:30 மணிக்கு, சுவாமி அம்பாள் அஷ்டபந்தனம் சாத்துதலும், தொடர்ந்து, 5:30 மணிக்கு, விசேஷசந்தியும், யாக சாலை பிரவேசம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். தொடர்ந்து கும்பாபிஷேக நாளான, வரும் 30ம் தேதி, காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை, 8:30 மணிக்கு, மகா பூர்ணாஹூதியும், யாத்ராதான சங்கல்பமும், காலை 9:00 மணிக்கு, பிரதான கலசம் ஆலய வலம் வருதலும் நடைபெறும். பின், காலை, 9:30 மணிக்கு, அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், காலை, 9:45 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானை முருகர், நவக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அதன் பின், காலை 10:00 மணிக்கு, சவுபாக்ய காமாட்சி அம்பாள் சமேத பாதாள காளீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து வீதிஉலாவும் நடைபெறும்.