கோடை வெப்பம் எதிரொலி :வெறிச்சோடிய நவபாஷாணம்
தேவிபட்டினம்;கடும் கோடை வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் வெறிச்சோடியது. தேவிபட்டினத்தில் அமைந்துள்ள நவபாஷாணம் திருமண தடை, குழந்தை பாக்கியம், ஏவல் உள்ளிட்டவைகளுக்கு நிவர்த்தி செய்யும் ஸ்தலமாக உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம், பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைத்து வருவதால், வெளிமாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பக்தர்களின் கூட்டம் இல்லை. ஒரு சில பக்தர்களே வந்து சென்றனர். காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நவபாஷாணத்தில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து நவபாஷாண அர்ச்சகர்கள் கூறுகையில், வழக்கமாக விடுமுறை நாட்களில் 10 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணி வரை அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஒரு வாரமாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்த நேரத்தில் பக்தர்கள் ஒரு சிலரே வந்து செல்கின்றனர். வெயில் தாக்கம் அதிகரிப்பால் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி வருகின்றன, என்றனர்.