அழகர்கோவில் சித்திரை திருவிழா: கொட்டகை முகூர்த்தம் நடந்தது
அழகர்கோவில்: அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10ம் தேதி நடக்கிறது. திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை
முகூர்த்தம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நேற்று நடந்தது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் விழாக்களில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா புகழ் பெற்றது. இவ்விழா மே 6ல் துவங்குகிறது. முதல் 2 நாட்களும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மதுரை புறப்படுகிறார் மே 8 மாலை 5:00 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளழகர்
திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்படுகிறார். 18ம் படி கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டக படிகளில் எழுந்தருளுகிறார். மே9 காலை 6:00 மணிக்கு
மூன்றுமாவடியிலும், 9:00 மணிக்கு புதூரிலும், மாலை அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது.
ஆற்றில் இறங்குகிறார்மே 10 அதிகாலை தங்க குதிரை வாகனத்திலும், தல்லாகுளத்தில் வெட்டிவேர் சப்பரம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களிலும் சுவாமி எழுந்தருளுகிறார்.
கள்ளழகர் காலை 6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 10:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகர், மே 11ம் தேதி பகலில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு 8:00
மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தடைகிறார். அங்கு இரவு தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது.பூப்பல்லக்கு மே 12 காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையும், இரவு 2:00 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அப்பன்திருப்பதி வழியாக மே 14 அழகர் மலையை அடைகிறார்.
திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக தல்லா குளம் பெருமாள் கோயிலில் நேற்று காலை கொட்டகை முகூர்த்தம் நடந்தது. ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழிக்கு பூஜை செய்து மாவிலையால் அலங்கரிக்கப்பட்டது. பின் பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் மேள, தாளம் முழங்க கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு கோபுரம் முன் ஊன்றப்பட்டது.
வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடந்தது. இதன் பிறகே பக்தர்கள் அமைக்கும் மண்டக படிகளுக்கு பந்தல் அமைப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு 430 மண்டகபடிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இந்த ஆண்டு 433 மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார். மண்டகபடிகள் தகர கொட்டகையால் அமைக்கப்பட வேண்டும். கீற்று கொட்டகைகளில் சுவாமி எழுந்தருள மாட்டார். ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் சிமென்ட் தொட்டியில் தண்ணீர் நிரப்பி சுவாமி வரும்போது திறந்து விடப்படும். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்க வசதியாக 15 இடங்களில்
டிவிக்கள் வைக்கப்பட உள்ளதாக. நிர்வாக அதிகாரி மாரிமுத்து தெரிவித்தார். ரூ.29.83 லட்சம் வசூல் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 10 இடங்களில் நிரந்தர உண்டியல்கள்
உள்ளன. நேற்று கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருப்பரங்குன்றம் நிர்வாக அதிகாரி செல்லதுரை ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 21,36,156 ரூபாய், 42 கிராம் தங்கம், 217 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன. மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் 5,85,046 ரூபாய், 14 கிராம் தங்கம், 673 கிராம் வெள்ளியும், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 2,63,042 ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் வருவாயாக கிடைத்தன.