மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா துவக்கம்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்
உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன் கிழமை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு பூ போட்டு விழா துவங்கப்பட்டது. இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும், மே, 10ல் தீ மிதி விழா, தேர்த்திருவிழா நடக்கவுள்ளது. தொடர்ந்து, 15 நாட்களுக்கு பல்வேறு பிரிவுகள் சார்பில் சிறப்பு பூஜை, மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கவுள்ளது. நேற்று, ஒரு பிரிவினர் பால்குடம், புனிதநீரை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
* நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவிலில், சித்திரை மாத தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல், பூச்சட்டி எடுத்தல்,
சாட்டையடி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, திருத்தேர்த் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர் சிறிது தூரம் நகர்ந்தவுடன் நிறுத்தி வைத்தனர். மதியம், 1:00 மணிக்கு, 10க்கும்
மேற்பட்ட பக்தர்கள் வருவான் வடிவேலன் அலகு குத்தி வந்தனர். 500க்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். மாலை, தேர் வீதி உலா வந்து நிலை நின்றது.