உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவிலில் புதிய ரதோற்சவம்!

மன்னீஸ்வரர் கோவிலில் புதிய ரதோற்சவம்!

அன்னூர் : அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் புதிய ரதோற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். "மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு புதியதாக ஏழு லட்சம் ரூபாய் செலவில் ரதம் (சிறிய தேர்) செய்யப்பட்டது. 13 அடி உயரத்தில், 10 அடி நீளம், 7 அடி அகலத்தில் வேங்கை மரத்தில் ஆறுமாதங்களில் முழுவதும் சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய ரதம் உருவாக்கப்பட்டது. ரதத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். புதிய ரதம் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் ரதோற்சவ நிகழ்ச்சி நேற்று மாலை 6.45 மணிக்கு துவங்கியது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், காரமடை கருப்பராய சாமிகள் ஆகியோர் வடம் பிடித்து ரதோற்சவத்தை துவக்கி வைத்தனர். திருமுருகன் அருள்நெறிக்கழக குருசாமி ராமசாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன், நிர்வாகிகள் கருப்பசாமி, சின்னச்சாமி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8.00 மணிக்கு ரதம் நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !