வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள்தீவிரம்:பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்
தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக 150 சிறப்பு பஸ்கள், இரவு பகலாக இயக்கப்படுகிறது. பாதுகாப்பிற்கு ஏ.டி.எஸ்.பி., தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தேனி எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 9.5.17 துவங்கி 16 ம்தேதி வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது. கவுமாரியம்மனை தரிசிக்கவும், அம்மனுக்கு நேர்த்திக்கடன்
செலுத்த பல ஆயிரம் பக்தர்கள் திரள்வார்கள். தென் மாவட்டங்களிலும் இருந்தும் அதிகளவு பக்தர்கள் வருவதால் ஒரு வாரம் திருவிழா களைகட்டும். பொழுது போக்கு அம்மங்கள், தற்காலிக கடைகள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என விடிய, விடிய திருவிழா நடக்கும். திருவிழா நாட்கள் முழுவதும் தூங்கா நகரமாக வீரபாண்டி திகழும். கோயில் நிர்வாகம் மற்ற துறைகளை இணைத்து சுகாதாரம், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளன.
பக்தர்கள் வசதிக்காக பெரியாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முல்லையாற்றில் நீர் வரத்து உள்ளது.மாற்றுபாதை ஏற்பாடுதிருவிழா நாட்களில் வீரபாண்டி வழியாக வாகன போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தேனியில் இருந்து கம்பம் செல்லும் பஸ்கள் குச்சனூர் விலக்கு, உப்புக்கோட்டை, கூழையலூர், குச்சனூர், மார்க்யைகன் கோட்டை,
சின்னமனூர் வழியாக கம்பம் செல்லும். கம்பத்தில் இருந்து தேனி வரும் வாகனங்கள் கோட்டூர், தப்புக்குண்டு விலக்கு, தப்புக்குண்டு, நாகலாபுரம், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர், தேனி வந்தடையும்.சிறப்பு பஸ்கள் திருவிழாவிற்காக அரசு
போக்குவரத்து கழகம் திண்டுக்கல், மதுரை, வத்தலக்குண்டு பகுதியில்களில் இருந்தும், தேனி மாவட்டத்தில் உள்ள 8 டெப்போக்களில் இருந்தும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட
உள்ளது. வீரபாண்டியில் செயல்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்டுகளில் 24 மணிநேரமும் பயணிகளுக்கு உதவும் வகையில் கிளை மேலாளர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுவார்கள். தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தேவையை பொறுத்து உடனுக்குடன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி கோட்ட மேலாளர் ஆனந்தன் தெரிவித்தார்.
பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீஸ் தேனி எஸ்.பி. பாஸ்கரன் கூறுகையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசையை காட்டுவது வழக்கம். திருட்டு, வழிப்பறியை தடுக்கும் பொருட்டு ஏ.டி.எஸ்.பி., தலைமையில் 3 டி.எஸ்.பி., க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 25 எஸ்.ஐ., க்கள், 200 ஆயுதடைப்படை போலீசார் மற்றும் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார் என, 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோயில் வளாகம், முல்லை பெரியாறு ஆற்றுப்பகுதி, தற்காலிக பஸ்
ஸ்டாண்ட், வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பக்தர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் கோயில் வளாகம், ஆற்றுப்பகுதி, ரோடு பகுதி உள்ளிட்ட
4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். 24 மணி நேரம் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. பொருட்காட்சி இடத்தில் மப்டி யில் போலீசார் இரு பாலரும் ரோந்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா ( சிசிடிவி) பொருத்தி கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.